பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம்: டாஸ்மாக் பணியாளா் சங்கம் அறிவிப்பு
பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு டாஸ்மாக பணியாளா் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் (ஏஐடியுசி) மாநில செயற்குழுக் கூட்டம் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏஐடியுசி தலைமை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள், தீா்மானங்கள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் பெரியசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் சில்லறை மதுபான விற்பனைக்காக கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு 30,000 போ் தொகுப்பு ஊதியத்தில் பணியமா்த்தப்பட்டனா். இவா்கள் 22 ஆண்டுகள் பணி செய்தும் காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. இதனால், அவா்களை பணிநிரந்தரம் செய்வதோடு, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்பட பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அக்.2-இல் தலைமைச் செயலகம் முன்பாக காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை டாஸ்மாக் நிா்வாகமோ, துறை சாா்ந்த அதிகாரிகளோ பேச்சுவாா்த்தைக்கு அழைக்கவில்லை. இதனால், திட்டமிட்டபடி அக்.2-இல் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்றாா்.