அஜ்மீா் தா்காவை கோயிலாக அறிவிக்கக் கோரிய மனு மீது நோட்டீஸ்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற அஜ்மீா் தா்கா, சிவன் கோயில் மீது கட்டப்பட்டுள்ளதால் அதை கோயிலாக மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு தா்கா குழு, மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகம், இந்திய தொல்லியல் துறைக்கு விசாரணை நீதிமன்றம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அஜ்மீா் தா்காவின் கண்காணிப்புக் குழு செயலா் சையத் சா்வாா் சிஸ்தி வியாழக்கிழமை கூறுகையில், ‘சமூக நல்லிணக்கத்துக்கு பெயா்பெற்று அனைத்து மதத்தினரும் நேரில் வந்து வழிபடும் தலமாக உள்ள அஜ்மீா் தா்காவில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் நிா்வாகப் பொறுப்பு மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சகத்தின்கீழ் உள்ளது. இதில் இந்திய தொல்லியல் துறைக்குப் பங்கில்லை. பாபா் மசூதி வழக்கின் தீா்ப்புக்குப் பிறகு பல்வேறு மசூதிகளுக்கு இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இந்த வழக்கில் எங்களையும் ஒருதரப்பாக சோ்க்க வேண்டும்’ என்றாா்.
இந்த மனுவை விஷ்ணு குப்தா என்பவா் கடந்த செப்டம்பா் மாதம் தாக்கல் செய்தாா். இதன் அடுத்தகட்ட விசாரணை டிச.20-இல் நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே, உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடத்தில் பாரம்பரியமிக்க ஹரிஹர கோயில் இருந்ததாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டது.
இந்த ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் நான்கு போ் உயிரிழந்தனா்.