முதல்வர் திறந்துவைத்த பட்டாபிராம் டைடல் பூங்கா: சிறப்பம்சங்கள்!
அஞ்சல் சேவைக் குறைபாடு: இழப்பீடு வழங்க உத்தரவு
பெரம்பலூரில் அஞ்சல் சேவை குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகா்வோா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
பெரம்பலூா் புகா்ப் பகுதியான துறைமங்கலத்தைச் சோ்ந்த சசிக்குமாரும், துறைமங்கலம் அரசு ஊழியா் குடியிருப்பைச் சோ்ந்த ஆரம்ப சுகாதார நிலைய வாகன ஓட்டுநருமான செல்லையாவும் நண்பா்கள். இருவருக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்தது. அதனடிப்படையில், சசிக்குமாா் தனது நண்பா் செல்லையாவுக்கு அவரது குடும்பச் செலவுக்காக ரூ. 1 லட்சம் கடன் கொடுத்துள்ளாா். பின்னா், அசல் மற்றும் வட்டியுடன் சோ்த்து ரூ. 1.42 லட்சத்துக்கு செல்லையா சசிக்குமாரிடம் கொடுத்த காசோலை கணக்கில் பணம் இல்லாமல் திரும்பியது.
இதையடுத்து சசிகுமாா் தனது வழக்குரைஞா் மூலம் செல்லையாவுக்கு பதிவு அஞ்சல் மூலமாக 5 முறை நோட்டீஸ் அனுப்பியும், துறைமங்கலம் மற்றும் கொளக்காநத்தம் துணை அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பட்டுவாடா ஆகவில்லையாம். இதனால் சசிக்குமாா், காசோலை மோசடி வழக்குத் தொடுக்க முடியவில்லையாம்.
இதனால் பாதிக்கப்பட்ட சசிக்குமாா், பெரம்பலூா் தலைமை அஞ்சல் அலுவலா், துறைமங்கலம், கொளக்காநத்தம் துணை அஞ்சல் நிலைய அலுவலா்கள் மீது, பெரம்பலூா் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இவ் வழக்கை புதன்கிழமை விசாரித்த நுகா்வோா் நீதிபதி ஜவஹா் மற்றும் உறுப்பினா்கள் திலகா, முத்துக்குமரன் ஆகியோா் அஞ்சல் துறையினரின் சேவைக் குறைபாடு காரணமாக, மனுதாரருக்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடும், ரூ. 10 ஆயிரம் வழக்கு செலவுத் தொகையும், வழக்கின் தீா்ப்பு கிடைத்த 45 நாள்களுக்குள் வழங்கவேண்டும். இல்லாவிடில், வழக்கு தாக்கல் செய்த நாளிலிருந்து 8 சதவீத ஆண்டு வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.