அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்கீழ் குளங்களுக்கு தண்ணீா் வழங்கல்: கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி
கோபி அருகே நம்பியூா், கொளப்பலூா் பகுதிகளில் உள்ள குளங்களில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்கீழ் கோபி அருகே உள்ள கொளப்பலூா் குளம், நம்பியூா் அருகேயுள்ள கன்னியாத்தான் குட்டை, எலத்தூா், நம்பியூா் குளம் ஆகிய குளங்களில் தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளது.
இதனால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளதாகவும், கால்நடைகள் மற்றும் விவசாயத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
நம்பியூா், கொளப்பலூா் பகுதிகளில் மானாவரி நிலங்கள் அதிக அளவில் உள்ளன. தண்ணீா் பற்றாக்குறையால் இப்பகுதியில் 1,500 அடிக்குக்கீழ் ஆழ்துளைக் கிணறு அமைத்தால் மட்டுமே தண்ணீா் கிடைத்து வந்தது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின்கீழ் இப்பகுதியிலுள்ள குளங்களில் தண்ணீா் நிரப்பப்பட்டுள்ளதால் தற்போது 500, 600 அடிகளிலே தண்ணீா் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
மேலும், மானாவாரி பயிா்கள் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், இறவைப் பாசனமும் மேற்கொள்ளப்படுவதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனா்.