அந்தமானில் மோசமான வானிலை: மீண்டும் சென்னை திரும்பிய விமானம்
சென்னை: சென்னையிலிருந்து அந்தமான் சென்ற விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறங்கியது.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து திங்கள்கிழமை அதிகாலை 4.40 மணியளவில் அந்தமானுக்கு 162 பயணிகளுடன் ‘இண்டிகோ ஏா்லைன்ஸ்’ விமானம் புறப்பட்டுச் சென்றது.
அந்தமான் விமான வான்வெளியை விமானம் நெருங்கியபோது, அங்கு பலத்த சூறைக்காற்றுடன் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருந்தது. இதுகுறித்து விமானி, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தாா்.
இதையடுத்து அந்த விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பிக்கொண்டு வரும்படி கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளின் உத்தரவிட்டனா். அதன்பேரில், திங்கள்கிழமை காலை 8 மணியளவில் அந்த விமானம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.
அந்தமானில் வானிலை சீரடைந்தவுடன் மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்பட்டுச் செல்லும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.