செய்திகள் :

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வர் வலியுறுத்தல்

post image

நாகப்பட்டினம்: "கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

நாகப்பட்டினம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.139.92 கோடி மதிப்பிலான 35 முடிவுற்ற பணிகளைத் தொடங்கிவைத்தும், ரூ.82.99 கோடியிலான 206 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.200.27 கோடி மதிப்பில் 38,956 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கியும் முதல்வர் பேசியதாவது:

சிக்கல் சிங்காரவேலவர் கோயில், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா என மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக நாகை மாவட்டம் விளங்குகிறது. மீனவர்கள் நிறைந்த நாகை மாவட்டத்தின் மிகப்பெரிய பிரச்னை இலங்கைக் கடற்படையால் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தாக்கப்படுவதும்தான்.

மீனவர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என்னை கோட்டையில் சந்தித்து இதுகுறித்து தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். அண்மைக்காலமாக, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க பெரும் தொகையை இலங்கை நீதிமன்றங்கள் அபராதமாக விதிப்பதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளை ஏலம் விடுவதால் தங்களது வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாகவும் கூறினர்.

பிரதமர் மோடி பதவியேற்ற கடந்த 2014}ஆம் ஆண்டுமுதல் இதுவரையிலான 10 ஆண்டுகளில் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 3,656 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களில் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 860 பேர். மொத்தம் 611 விசைப்படகுகளைப் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் 22}ஆம் தேதி வரை, இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை 736 முறை தாக்கியிருப்பதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சரே அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

2010}ஆம் ஆண்டுமுதல் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் இப்போது நடப்பதில்லை. 2016}ஆம் ஆண்டு இந்திய} இலங்கை மீனவர்கள் இடையே, அமைச்சர்கள் நிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எடுக்கப்பட்ட முடிவுகள் மீறப்படுகின்றன.

இலங்கைக் கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இலங்கையின் வெளிநாட்டு மீன்பிடி தடைச் சட்டத்தால் கொடுமைகள் அரங்கேறுகின்றன.

இந்திய அரசின் தரப்பில் வெளியுறவுத் துறை, மீன்வளத் துறை அதிகாரிகள் நான்கு பேரும், இலங்கை அரசின் தரப்பில் நான்கு பேரும் இணைந்து ஒரு குழு அமைத்து, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு கண்டு வருகிறோம் என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினாரே தவிர, இதுவரை எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. அதற்கு முதலில் தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். இதில் பிரதமர் நேரடியாகத் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.

நமது மீனவர்களின் உரிமையை நிலைநாட்டும் வகையில், உறுதியான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். மிகக் கொடூரமான விதிமுறைகள், தண்டனைகள் அடங்கியுள்ள 2018}ஆம் ஆண்டு சட்டத்தை இலங்கை அரசு முதலில் நீக்க வேண்டும்.

மீனவர்களிடம் அதிக அளவில் அபராதம் வசூலிக்கக்கூடிய கொடுமையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடிப்பதை இலங்கை அனுமதிக்கும் வகையில், புதியதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நிதி மறுப்பு: ஒவ்வொரு பிரச்னையிலும், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதி முறையாக வருவதில்லை. இயற்கைப் பேரிடர் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்யக்கூட நிவாரண நிதியை மத்திய அரசு முழுமையாகத் தரவில்லை. இப்போது மாணவர்களின் கல்விக்கான நிதியைக்கூட தர மறுக்கிறார்கள். இந்த நிதியைப் பெறுவதற்கு மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.

தமிழகம் முன்னேறியிருப்பதற்கு காரணம் இருமொழிக் கொள்கைதான் என்பது மத்திய அரசுக்குத் தெரியும். மத்திய அரசின் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. அதற்குக் காரணம், நம்முடைய தாய்மொழியான தமிழ், உலக மொழியான ஆங்கிலம், வாழ்க்கையில் முன்னேற அறிவியல், தொழில்நுட்பம், கணிதம், சமூக அறிவியல் போன்ற படிப்புகள். இதுவே நம்முடைய வெற்றிக்கு அடிப்படை என்றார் முதல்வர் ஸ்டாலின்.

விழாவில், அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சா.சி. சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆர்.பி. ராஜா, தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், மக்களவை உறுப்பினர் வை. செல்வராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நாகை மாலி, முகமது ஷா நவாஸ், எஸ். ராஜகுமார், நிவேதா எம். முருகன், தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கெüதமன், தாட்கோ தலைவர் உ. மதிவாணன், நாகை மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

"தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்தின் உரிமைப் பிரச்னை'

"மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு தமிழகத்தின் உரிமைப் பிரச்னை; இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அரசியல் வேறுபாடுகளை மறந்து அனைத்துக் கட்சியினரும் பங்கேற்க வேண்டும்' என முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

நாகப்பட்டினத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் பேசியதாவது: நம்முடைய பிரதிநிதித்துவத்தைக் குறைப்பதற்கும், நம்முடைய குரலை நசுக்கவும் தொகுதி மறுசீரமைப்பு என்ற ஆயுதத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது. எனவேதான் முன்னெச்சரிக்கை உணர்வுடன், அதற்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறோம்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டின் உணர்வை, ஒற்றுமையாக ஒருமித்த குரலில் எழுப்ப வேண்டும் என்ற நோக்கத்துடன் அனைத்துக் கட்சிக் கூட்டம் புதன்கிழமை (மார்ச் 5) கூட்டப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் முறையாக அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. பல கட்சிகள் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. சில கட்சிகள் கலந்து கொள்ள மாட்டோம் என்று கூறியுள்ளன. இது தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்னை. தயவு செய்து அரசியல் வேறுபாடுகளை ஓரமாக வைத்துவிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் என்ற ஆட்சிப் பாதையில், மகிழ்ச்சியான மலர்ச்சியான, வளர்ச்சியான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றார்.

நாகப்பட்டினத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முகமது ஷா நவாஸ், மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் உள்ளிட்டோர்.

தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்! மு.க. அழகிரி வருகை!

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மருத்துவமனைக்கு நேரில் வந்து மு.க.அழகிரி நலம்விசாரித்தார்.வயது முதிா்வு காரணமாக சென்னை கோபாலபுரத்த... மேலும் பார்க்க

தங்கம் விலை ரூ. 560 உயர்வு! இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 64,080-க்கு விற்பனையாகிறது.தங்கத்தின் விலை சனிக்கிழமை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.7,940-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.63,520-க்... மேலும் பார்க்க

மீனவர்களுக்கான நிவாரணத் தொகை அதிகரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

இலங்கை கடற்படை நடவடிக்கையால் பாதிக்கபட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்தம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுவரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் பார்க்க

திருச்செந்தூா் அய்யா வைகுண்டர் அவதாரபதியில் அவதார நாள் விழா!

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 193வது அவதார நாள் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இவ்விழாவை முன்... மேலும் பார்க்க

சென்னை: தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கம்!

சென்னை : தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் வரை இயக்கப்படும் என்கிற நடைமுறை இன்றிலிருந்து அமலுக்கு வந்துள்ளது. மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், முதல் நாள் நடைபெற்ற மொழிப்பாடத் தேர்வை 11,430 பேர் எழுதவில்லை.தமி... மேலும் பார்க்க