செய்திகள் :

ஆறுதல் கூற வந்த அமைச்சர்... சமாதானம் அடையாத மீனவர்கள்; தங்கச்சிமடத்தில் தொடரும் போராட்டம்!

post image

இலங்கை கடற்படையினர் கடந்த 10 ஆண்டுகளில் 3656 மீனவர்களை சிறைபிடித்ததுடன், 300-க்கும் மேற்பட்ட படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மீனவர்கள் தற்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் மீட்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் மீனவர் குடும்பத்தினர்

கடந்த வெள்ளிக்கிழமை உண்ணாவிரதத்துடன் தங்கள் போராட்டத்தை துவக்கிய மீனவர்கள், காத்திருப்பு போராட்டம், பிச்சை எடுக்கும் போராட்டம் என பல கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து நேற்று முன் தினம் போராட்ட பந்தலுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி மீனவர்களிடம் கோரிக்கை மனுவை பெற்று சென்றார். இதன் பின்னரும் மீனவர்களை விடுவிக்கவோ, படகுகளை மீட்பது குறித்தோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் மீனவர்களின் போராட்டம் 4-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆறுதல் கூற மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் முத்துராமலிங்கம், மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் ஆகியோர் போராட்ட பந்தலுக்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மீனவர்களிடையே பேசிய அவர்கள் தமிழக அரசு மீனவர்களுக்கு செய்து தரும் உதவிகள் குறித்தும், மீனவர்களை விடுவிக்க முதலமைச்சர் கொடுத்து வரும் அழுத்தம் குறித்தும் பேசினர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மேலும் மீனவர்களை விடுவிக்க நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி-க்கள் குரல் கொடுப்பார்கள் எனவும், வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வார்கள் எனவும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார். ஆனால் இதனை ஏற்க மறுத்த மீனவர்கள் மற்றும் பெண்கள் அமைச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் நிலமை மோசமடையவே அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறினார்.

இதனால் ஆவேசம் அடைந்த மீனவர்கள் தங்களது முக்கிய கோரிக்கையான சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்தல், படகுளை மீட்டு தருதல், இரு நாட்டு மீனவர்களும் சுமூக முறையில் மீன்பிடித்தல் ஆகியவற்றை நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் 5 -வது நாளாக தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

மீனவர்களிடையே பேசும் அமைச்சர்

இதனிடையே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களின் விசை படகுகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டு வரும் இழப்பீட்டு தொகை 6 லட்சத்தில் இருந்து 8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

ராமேஸ்வரம்: 3-வது நாளாகத் தொடரும் போராட்டம்; கறுப்பு சட்டையுடன் கஞ்சித்தொட்டி திறக்கும் மீனவர்கள்!

பாரம்பர்ய பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பதுடன், அவர்களது படகுகளை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்கி வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 42 மீனவர்களையும், அவர்கள... மேலும் பார்க்க