கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் பலி!
கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய டிஎஸ்பி ரமேஷ் பாபு கூறுகையில்,
திங்கள்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டு கோதாவரி ஆற்றின் நடுவில் உள்ள தீவான பிரிட்ஜ் லங்காவிலிருந்து 12 பேர் நாட்டுப்படகில் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஹேவ்லாக் பாலத்தின் தூண் எண் எட்டிற்கு அருகே பலத்த காற்று காரணமாக படகு இழுத்துச் சென்றது. படகு கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மீதமுள்ள 10 பேர் மீட்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் இறந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
கோதாவரி நதியின் நடுவில் அமைந்துள்ளதால், காற்றை ரசிக்க பலர் தீவுக்கு வருகிறார்கள்.
நாட்டுப் படகுகள் மக்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மீன்பிடிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இருப்பினும் மக்கள் நாட்டுப்படகில் பயணிப்பதால் விபத்துக்கள் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.