ரஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்: கொந்தளித்த காங்கிரஸ் எம்எல்ஏ!
நடிகை ரஷ்மிகா மந்தனாவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
‘நேஷனல் க்ரஷ்’ என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஷ்மிகா மந்தனாவுக்கு தொட்டதெல்லாம் பொன் என்பதுபோல அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பதிவு செய்து வருகின்றன.
அனிமல், புஷ்பா - 2 ஆகிய படங்களின் மூலம் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார்.
குறிப்பாக அனிமல், புஷ்பா - 2 படங்கள் சேர்த்து ரூ. 2,700 கோடிகள் வசுலித்து அசத்தியது. அண்மையில், இவர் நடிப்பில் வெளியான சாவா திரைப்படமும் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சர்தார் - 2 படப்பிடிப்பில் கார்த்திக்கு காயம்!
ஆனால், ரஷ்மிகா மந்தனா தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். என்னதான் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தாலும் ரஷ்மிகா முதலில் அறிமுகமானது கன்னட சினிமாவில்தான். கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, சவுக் உள்ளிட்ட கன்னட படங்களில் நடித்தபின்பே பிறமொழிப் படங்களில் நடிக்கத் துவங்கினார்.
கடந்தகாலம் இப்படியிருக்க, சாவா படத்திற்கான நிகழ்வு ஒன்றில் தன்னை ஹைதராபாத்திலிருந்து வந்தவர் எனக் கூறியிருக்கிறார் ரஷ்மிகா. இதனால், கன்னட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ரஷ்மிகாவை விமர்சித்து பதிவிட்டனர். ஆனால், இதுகுறித்து எந்த வருத்தத்தையும் மந்தனா தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா என்பவர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, “நடிகை ரஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவிலிருந்து வந்தவர். ஆனால், தனக்கு ஜைதராபாத்தில் வீடு இருப்பதாகவும் கர்நாடகம் எங்கிருக்கிறது? என்றும் பேசியிருக்கிறார். கடந்தாண்டு பெங்களூருவில் நடைபெற்ற திரைவிழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் 10,12 முறைக்கு மேல் அழைத்தும் ரஷ்மிகா விழாவில் கலந்துகொள்ளவில்லை. இங்கு வாழ்க்கையைத் துவங்கியவர் கன்னடத்தை அவமதிக்கிறார். அவருக்கு சரியான பாடத்தைக் கற்பிக்க வேண்டும்” என ஆவேசமாகக் கூறியுள்ளார்.