மூடநம்பிக்கை: பச்சிளம் குழந்தைக்கு 40 முறை சூடு வைத்த கொடூரம்!
ஒடிசா மாநிலத்தின் நபரங்பூரில் பச்சிளம் குழந்தைக்கு இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தின் ஹண்டல்படா கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஆண்டு குழந்தை பிறந்துள்ளது. ஒருமாதமேயான பச்சிளம் குழந்தைக்குக் கடந்த சில நாள்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆனால் குழந்தையின் உடலுக்குள் தீய சக்தி புகுந்துவிட்டதாக குடும்பத்தினர் நம்பியுள்ளனர். குழந்தையைச் சிகிச்சைக்குக் கொண்டு செல்லாமல், தீய சக்தியை விரட்டும் நோக்கத்தில் பச்சிளம் குழந்தையின் தலை, வயிறு பகுதியில் இரும்பு கம்பியால் 40 முறை சூடு வைத்துள்ளனர்.
இதையும் படிக்க: பூனையின் இறப்பால் துக்கம் தாளாமல் பெண் தற்கொலை: உ.பி.யில் அதிர்ச்சி!
வலி தாளமுடியாமல் குழந்தை தொடர்ந்து அழுததால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தை ஆபத்தான நிலையில் உமர்கோட் மருத்துவமனைக்குக் கொண்டுவந்தனர். குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் வயிற்றில் சூடுவைத்த அடையாளங்களைக் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக மூத்த அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்து குழந்தைக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைப் பின்னர் குழந்தை நலமுடன் இருப்பதாக நபரங்பூர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தோஷ் குமார் பாண்டா தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் இதுபோன்ற மூடநம்பிக்கைகள் இன்னமும் இருந்து வருவதாகவும், சுகாதாரத்துறை மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.