நிகழ்ச்சியில் டிக்டாக் நிறுவனத்தின் ஈடுபாட்டிற்கு உய்குர் சமூகம் கண்டனம்!
முதல் அரையிறுதி: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 265 ரன்கள் இலக்கு!
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபையில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
இருவர் அரைசதம், 265 ரன்கள் இலக்கு
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் இளம் வீரர் கூப்பர் கன்னோலி களமிறங்கினர். கூப்பர் கன்னோலி 0 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின், டிராவிஸ் ஹெட் மற்றும் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தனர். ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக விளையாட டிராவிஸ் ஹெட் வழக்கமான அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய இந்த பார்ட்னர்ஷிப்பை வருண் சக்கரவர்த்தி உடைத்தார். டிராவிஸ் ஹெட் 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
இதையும் படிக்க:சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் மாற்றமா?
அதன் பின், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறிது நேரம் நீடித்தபோதிலும், லபுஷேன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜோஷ் இங்லிஷ் 11 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 96 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். நடுவரிசை ஆட்டக்காரரான அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்கள் முடிவில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா மற்றும் அக்ஷர் படேல் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: நியூசி.யைக் காட்டிலும் தென்னாப்பிரிக்கா வலுவாக உள்ளது: ரிக்கி பாண்டிங்
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்குகிறது.