தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!
சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் அக்கிராமத்தின் மொத்தமுள்ள 11 வார்டுகளில் 6 வார்டுகளில் பெண்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.3) நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி குறித்து வெளியான விடியோவில் அந்த 6 பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண் பிரதிநிதிகளுக்கும் பஞ்சாயத்து செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைப்பது பதிவாகியிருந்தது.
இதையும் படிக்க: மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, பண்டாரியா ஜன்பத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளாதாக கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் திரிபாதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அப்பகுதிவாசிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இல்லையென்றால் இந்த சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.