மன்னார்குடி: கோயில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணாமலை நாதர் சன்னதி தெருவில் உள்ள அண்ணாமலை நாதர் கோயிலுக்கு சொந்தமான குளம் உள்ளது.
செவ்வாய்க்கிழமை இந்தக் குளத்தில் மீன்கள் செத்து மிதந்ததால் குடிநீர் விநியோக தண்ணீரில் விஷம் கலந்திருக்குமோ? என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர் .
இந்தக் குளம் இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கும் கால்நடைகளுக்கும் பயன்பட்டு வந்ததுடன் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வந்தது.
மேலும், இக்குளத்தின் தென்கரையில் நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்தத் தொட்டியில் இருந்து மின்வாரிய நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் நீர் விநியோகம் செய்யப்படுகிறது.
மேலும், மூர்க்க விநாயகன் கோயில் தெருவில் உள்ள நகராட்சி மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த தொட்டியில் இருந்து பல்வேறு இடங்களுக்கு குடிநீர் குழாய் மூலம் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக இந்தக் குளத்தில் தனி நபர்கள் மீன்களை வாங்கி விட்டு வளர்த்து வந்து, அதனைப் பிடித்து விற்பனை செய்து வந்தனர். கடந்த ஆண்டு முதல் இந்தக் குளத்தில் யாரும் மீன் வளர்க்கவில்லை; அதனால் இந்த குளத்தில் இருந்து மீன் பிடித்து விற்பனை செய்வது நிறுத்தப்பட்டது.
கடந்த முறை கல்லணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட்டபோது மன்னார்குடியில் உள்ள பாமனி ஆற்றில் இருந்து இந்த குளத்திற்கு தண்ணீர் விடுவிக்கப்பட்டபோது அந்த தண்ணீர் மூலம் வந்த மீன்கள் மட்டுமே இங்கு இருந்து வந்தது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையில் குளத்தின் கரைப்பகுதிகளில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து , அப்பகுதி மக்கள் மன்னார்குடி நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த. சோழராஜன், துணைத் தலைவர் ஆர். கைலாசம், நகர்மன்ற உறுப்பினர் அசோக்குமார், மீன் வளத்துறையினர் ஆகியோர் குளத்தில் செத்து மிதந்த மீன்கள் பார்வையிட்டனர்.
நகராட்சி ஊழியர்கள் குளத்து தண்ணீரை பரிசோதனைக்காகவும் எடுத்தனர். அதேபோல் செத்து மிதந்த மீன்களும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டது.
பின்னர், செத்து மிதந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்தக் குளத்தில் மீன்கள் இறந்ததற்கு விஷம் கலக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என ஆய்வுக்குப் பின் தான் தெரியவருமன கூறப்பட்டது.
அந்தக் குளத்தை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை; கால்நடைகளையும் குளிப்பாட்ட அழைத்துவரவில்லை.
இந்த குளத்து தண்ணீரில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதால் அதில் ஏதும் நச்சுத்தன்மை கலந்திருக்குமோ? என்ற அச்சம் பொதுமக்களுடைய ஏற்பட்டுள்ளது.