ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞர்!
ஒடிசாவின் ஜகத்சிங்பூரில் ஆன்லைன் விளையாட்டுக்குத் தடை விதித்த பெற்றோர், சகோதரியைக் கொன்ற இளைஞரால் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜகத்சிங்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஜெயபாடா சேத்தி சாஹியில் அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சூர்யகாந்த் சேத்தி(21) கல்லூரியில் படித்துவந்தான். இந்தநிலையில் ஆன்லைன் விளையாட்டில் தினமும் மூழ்கிக்கிடப்பதைக் கண்டு பெற்றோர், சகோதரியும் கண்டித்துள்ளனர். ஆனால் சூர்யகாந்த் அதை நிறுத்தாவதாக இல்லை.
நேற்றிரவு தொடர்ந்து ஆன்லைன் விளையாடில் மூழ்கிய சூர்யகாந்த்தை பெற்றோர் கண்டித்தனர். இதனால் எரிச்சல் அடைந்த அவன் அருகிலிருந்த கனமான பொருளைக் கொண்டு தந்தை, தாய், சகோதரியை தாக்கியுள்ளான்.
இதனால் சம்பவ இடத்திலேயே பிரசாந்த் சேத்தி என்கிற கலியா (65), அவரது மனைவி கனகலதா (62) மற்றும் மகள் ரோசலின் (25) ஆகிய மூவரும் உயிரிழந்தனர்.
சம்பவத்திற்குப் பிறகு, சூர்யகாந்த் சேத்தி தப்பியோடினார். பின்னர் போலீஸாரால் அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் சூர்யகாந்த் தனது பெற்றோரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார்.
அந்த இளைஞருக்கு மனநலப் பிரச்னை இருக்கின்றதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.