"தமிழ்நாட்டின் குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் கருப்பு நாள்" - தஷ்வந்த் விடுதலை...
'அப்படிப்பட்ட கழிவறைகளுக்கு மாற்று வராதா என வருந்தியிருக்கேன்'- முதல்வரிடம் முன்னாள் எம்பி கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக திறக்கப்பட்ட கழிப்பறையில் ஒவ்வொரு கழிப்பறைக்கும் இடையே தடுப்புகள் இல்லாமல் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சமூக வலைதளங்களில் பலரும் அந்த கழிப்பறையின் படங்களை பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

முன்னாள் எம்.பி Dr. செந்தில்குமாரின் பதிவு
வைரலான அந்த கழிப்பறையை பற்றி "பொதுப்பணித்துறை விதிகளின் படி அரசுப் பள்ளிகளில் மாணவிகள் பயன்பாட்டிற்கு கழிப்பறைகள் இப்படி கட்ட மட்டும் தான் அனுமதி வழங்கப்படுகிறது.
MPLADS நிதியாக இருந்தாலும் இப்படி மட்டுமே கட்ட வேண்டும் என பொதுபணித்துறை சொல்கிறது. முதலமைச்சர் அவர்கள் புதிய அரசாணை (GO) இயற்றி இதை மாற்றி அமைக்க வேண்டும்" என்று திமுகவின் முன்னாள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr. செந்தில்குமார் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
Ground reality with PWD GO for construction of
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) October 7, 2025
urinals for govt schools.,
Administration sanctions are given only for this & bills sanctioned & passed if constructed accordingly only
As elected representatives I too faced this issue
CM must intervene review/pass Fresh GO. https://t.co/UA22ul1PF0
பொதுப்பணித்துறை விதிகளே இதுதான்!
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக அவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.
"நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது பெண்களுக்கு நவீன கழிப்பறை வசதியை ஏற்படுத்தித் தருவதைத்தான் என்னுடைய முக்கிய நோக்கமாக வைத்திருந்தேன்.
இந்தக் கழிப்பிடக் கட்டிடங்களைக் கட்டும்போது டெண்டர் விடுவார்கள். பிறகு கான்ட்ராக்டர்களுக்குப் பொதுப்பணித்துறை (PWD) அதற்கான டிசைனை அனுப்புவார்கள்.
குறிப்பிட்ட பட்ஜெட்டை அதற்கு என்று நிர்ணயம் செய்துவைத்திருக்கிறார்கள். அதனால் கான்ட்ராக்ட் எடுப்பவர்கள் அந்த பட்ஜெட்டுக்குள்ளும் செய்ய முடியாது. பட்ஜெட்டை தாண்டியும் செய்ய முடியாது.

நான் எம்.பியாக இருந்தபோது ஒரு கழிப்பறை கட்டிக்கொடுப்பதற்கு 13 லட்ச ரூபாயை நிர்ணயம் செய்து வைத்திருந்தார்கள்.
முதல் முறையாக ஒரு கழிப்பறைக் கட்டிடத் திறப்பிற்குப் போகும்போது அதில் கதவு, வாஷ்பேஷன் எல்லாம் இருந்தது.
ஆனால் பெண்களுக்கான அந்தக் கழிவறையில் ஒரு கழிவறைக்கும் இன்னொரு கழிவறைக்கும் இடையில் தடுப்புகள் இல்லை.
இதை நான் கேட்கும்போதுதான், பொதுப்பணித்துறை விதிகளின்படி அரசு பள்ளிகளில் மாணவிகள் பயன்பாட்டிற்குக் கழிப்பறைகள் இப்படி கட்ட மட்டும்தான் அனுமதி வழங்கப்படுகிறது என்று சொன்னார்கள்.
முதல்வருக்கு கோரிக்கை வைக்கும் எம்.பி
அப்போது அங்கு நிருபர்கள் வந்து புகைப்படம் எல்லாம் எடுத்தார்கள். ஆனால் அந்த சமயத்தில் அது பேசுபொருளாக மாறவில்லை.
தற்போது கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறையில் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாக மாறியிருக்கிறது.
ரொம்ப நாளாகவே இதற்கு ஒரு தீர்வு வராதா என்று ஏங்கிக்கொண்டு இருந்தேன்.
இது சரியான தருணம் என்று எண்ணியதால்தான் முதலமைச்சர் அவர்கள் புதிய அரசாணை (GO) இயற்றி பொதுப்பணித்துறை விதிகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

இதே மாதிரி பொதுப்பணித்துறையில் நிறைய பழைய அரசாணைகள் இருக்கின்றன.
அதையெல்லாம் மாற்றி அமைக்க வேண்டும். ரெடிமேட் பில்டிங் முறைகள் எல்லாம் பொதுப்பணித்துறை நடைமுறைக்குக் கொண்டு வரலாம்.
இதன் மூலம் நிறைய பள்ளிகளுக்கு மதில் சுவர்களைக் கட்டிக்கொடுக்க முடியும்.
பொதுப்பணித்துறையின் பழைய விதிமுறைகளை மாற்றினாலே இன்னும் நிறைய புதிய கட்டிடங்களைக் கட்டித்தர முடியும். இது முதலமைச்சர் பார்வைக்குச் சென்று ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்" என்றார்.