மகளிர் மாநாட்டில் பங்கேற்ற பிகார் செல்கிறார் பிரியங்கா காந்தி!
``அமித் ஷா, அஜித் தோவலிடம் கான்பரன்ஸ் கால்'' - வங்கி அதிகாரியிடம் ரூ.4 கோடி மோசடி செய்த உறவினர்கள்
தினம் தினம் பொதுமக்கள் ஏதாவது ஒரு வழியில் மோசடியால் பாதிக்கப்பட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள். இதில் டிஜிட்டல் கைது மோசடி ஒட்டுமொத்த நாட்டையும் கலங்கடித்துக்கொண்டிருக்கிறது.
புனேயைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் பணத்தாசை காட்டி ரூ.4 கோடியை சொந்த உறவினரே மோசடி செய்துள்ளார்.
புனேயில் வசிக்கும் சூர்யகாந்த் தோரட்(53) வங்கியில் வேலை செய்து வந்தார். அவர் முன்கூட்டியே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
2019ஆம் ஆண்டு தோரட்டை அவரது உறவினர் ஒருவர் அணுகினார். அவர் தனது மகன் மத்திய அரசின் உளவுத்துறையில் பணியாற்றுவதாகத் தெரிவித்தார்.
அதோடு தோரட் வங்கியில் ஆற்றிய சேவைக்காக அவருக்கு மத்திய அரசு ரூ.38 கோடி சன்மானம் கொடுக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்க பிராசஸிங் கட்டணம், வழக்கறிஞர் கட்டணம், அதிகாரிகளுக்கு கிஃப்ட் எனப் பல வழிகளில் செலவு இருக்கிறது என்று தோரட்டிடம் அவரது உறவினர் தெரிவித்தார்.
இக்காரணங்களைச் சொல்லி தோரட்டிடம் இருந்து 2020ஆம் ஆண்டில் இருந்து 2024ஆம் ஆண்டு வரை ரூ.4 கோடி வரை உறவினர் வாங்கிவிட்டார்.
இந்தப் பணமும் திரும்பக் கிடைத்துவிடும் என்று அந்த உறவினர் தெரிவித்தார். தோரட்டிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகளுடன் போலி கான்பரன்ஸ் காலில் பேசுங்கள் என்று கூறி யாரிடமோ பேசச் செய்தார்.
தோரட் அமித் ஷாவுடன் பேசுவதாக நினைத்துக்கொண்டு பேசினார். இது குறித்து தோரட் கூறுகையில்,
''எனது உறவினர் தனது மகனின் அடையாள அட்டை, துப்பாக்கி, வங்கி ஸ்டேட்மெண்ட்டை காட்டினார். எனவே அவர் (உறவினர்) மீது எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
அவரது மகன் பயிற்சிக்கு சென்றுள்ளதாக அவரது குடும்பத்தினர் எங்களிடம் கூறினார்கள், அதனால் அவர் வீட்டில் இருக்கமாட்டார் என்று சொன்னார்கள். அதனால்தான் இது உண்மை என நம்பினேன்.

ஜனவரி 2020 முதல் செப்டம்பர் 2024 வரை, நான் அவருக்கு பல்வேறு வங்கிக்கணக்குகள் மூலம் 4 கோடி ரூபாய் டிரான்ஸ்பர் செய்தேன்.
இதற்கு பணம் திரட்ட வீடு, தோட்டம், கடை, கார் மற்றும் மனைவியின் நகைகளை விற்பனை செய்தேன். அது போதாதென்று, நான் என் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தேன்.
ஆனாலும் அவர் சொன்ன சன்மான நிதி கிடைக்காததால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டேன். ஆனால் தனது மகன் முக்கியமான வேலையாக வெளிநாட்டில் இருக்கிறான் என்று சொன்னார்.
நாள்கள் செல்லச்செல்லத்தான் அனைத்தும் மோசடி என்று தெரிய வந்தது. என்னிடம் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகளிடம் பேசச்சொன்னார். கான்பரன்ஸ் காலில் அவர்கள் சன்மான நிதி கிடைத்துவிடும் என்றும், கவலைப்பட வேண்டாம் என்று சொன்னார்கள்.

ஆனால் பின்னர்தான் அமைச்சர்களும், அதிகாரிகளும் பேசவில்லை என்று தெரிந்து கொண்டேன். எனது உறவினர்களே எனது முதுகில் குத்துவார்கள் என்று நினைத்து பார்க்கவில்லை'' என்று தெரிவித்தார்.
தோரட் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளார். போலீஸார் சுபம், சுனில் பாபன்ராவ், ஓம்கார், பிரசாந்த், சுனில் பிரபாலே ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரித்து வருகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. தோரட் தனது வாழ்நாள் சேமிப்பு பணம் முழுவதையும் இழந்து, கடன் வாங்கி கொடுத்து இப்போது உறவினர்களால் கடனாளியாக நிற்கிறார்.