வத்தலகுண்டு: உதவி செய்வது போல் நடித்து ரூ. 10 லட்சம் திருட்டு; 2 மணி நேரத்தில் பணத்தை மீட்ட போலீஸ்
மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (80). இவர் கோயமுத்தூரில் உள்ள தனது மகன் வீட்டிற்குச் சென்று விட்டு அங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள வங்கிக் கணக்கிற்கு ரூ. 10 லட்சம் பணம் செலுத்துவதற்காக பணத்துடன் வத்தலக்குண்டு பேருந்து நிலையம் வந்துள்ளார்.
இரவு நேரம் ஆகிவிட்டது என்பதால் வத்தலகுண்டில் தங்கி விட்டு காலையில் வங்கிக்குச் செல்லலாம் என நினைத்து பேருந்து நிலையத்திலிருந்து பரமசிவம் வெளியே நடந்து சென்ற போது முதியவரிடம் இளைஞர் ஒருவர் உதவி செய்து போல் நடித்து பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் பரமசிவம் அசந்த நேரத்தில் ரூபாய் 10 லட்சம் பணம் வைத்திருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இளைஞர் எஸ்கேப் ஆகி விட்டர். பணம் பறிபோனதால் பதறிய முதியவர் பரமசிவம் வத்தலகுண்டு காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
உடனடியாக களம் இறங்கிய இன்ஸ்பெக்டர் கௌதமன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சேக் அப்துல்லா தலைமையிலான போலீசார் சிசிடிவி காட்சிகளைச் சோதனையிட்டனர்.
அப்போது முதியவரிடம் பணப்பெட்டியைப் பறித்துச் சென்ற அந்த இளைஞர் ஒரு ஆட்டோவில் தப்பிச் சென்றது சிசிடிவி காட்சியின் மூலம் தெரியவந்தது. தொடர் விசாரணை மேற்கொண்ட போலீசார் ரூ. 10 லட்சத்துடன் தப்பிய அந்த இளைஞர் சாமியார் மூப்பனூர் கிராமத்தில் பதுங்கி இருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனை அடுத்து அங்குச் சென்றதை வைத்து அவரின் வீட்டைக் கண்டுபிடித்து போலீசார் சுற்றி வளைத்தனர்.

வீடு பூட்டி இருப்பதைக் கண்டு வீட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் அங்கு முதியவரிடம் கொள்ளையடிக்கப்பட்ட ரூபாய் 10 லட்சம் பணம் பெட்டியில் அப்படியே இருப்பதைக் கண்டு அதனைக் கைப்பற்றினர். மேலும் அந்த இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே புகார் அளித்த இரண்டு மணி நேரத்தில் ரூபாய் 10 லட்சம் பணத்தை மீட்டுக் கொடுத்த வத்தலகுண்டு போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.