விலை குறைந்துள்ள மருத்துவக் காப்பீடு, ஆயுள் காப்பீடு; இப்போது வாங்கலாமா?
கடந்த 22-ம் தேதி முதல், ஜி.எஸ்.டி 2.0 அமலுக்கு வந்துள்ளது.
அதன் கீழ், தனிநபர் மருத்துவக் காப்பீடு மற்றும் தனிநபர் ஆயுள் காப்பீட்டிற்கான ஜி.எஸ்.டி வரி ஜீரோ ஆக்கப்பட்டுள்ளது. முன்பு, இந்த இரு காப்பீடுகளுக்கும் 18 சதவிகித ஜி.எஸ்.டி வரி இருந்தது.
இந்தக் குறைப்பால் என்ன லாபம்?
இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த பிரீமியம் தொகையில் இருந்து 18 சதவிகிதம் விலை குறைப்பு இருக்கும். இதனால், புதிதாக இந்தக் காப்பீடுகளை எடுப்பவர்களுக்கு பிரீமியம் தொகை குறைவாகத் தான் இருக்கும்.
மேலும், ஏற்கெனவே காப்பீடு எடுத்திருப்பவர்களுக்கும் இனி கட்டப்போகும் பிரீமியம் தொகைகள் குறையும்.
ஆக, இரண்டு விதத்திலுமே லாபம் தான்.

ஏன் இந்தக் காப்பீடுகள் எடுக்க வேண்டும்?
'எதிர்பாராததை எதிர்பாருங்கள்' - இது வாழ்க்கைக்கு மிகச்சரியாக பொருந்தும். யாருக்கு என்ன எப்போது நடக்கும் என்பதை கணிக்க முடியாது.
எதாவது அசம்பாவிதம் நேரும் சூழலில், நாமோ, நம் குடும்பமோ தவிக்கக்கூடும். அந்த நேரத்தில், இந்தக் காப்பீடுகள் நமக்கு துணை நிற்கும்.
இப்போது எடுப்பதால், குறைந்த விலையில் காப்பீடு எடுப்பீர்கள்.
ஆயுள் காப்பீடு என்றால் என்ன?
குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது ஆகும் பட்சத்தில், அவரின் குடும்ப உறுப்பினரை காக்கும் நிதிக் கவசம் தான் ஆயுள் காப்பீடு.
ரூல்ஸ் என்ன?
ஆயுள் காப்பீடு எடுக்கும்போது இந்த விதிகள் பூர்த்தியாகிறதா என்பதை ஒருமுறை செக் செய்துகொள்ளுங்கள்.
1. ஆயுள் காப்பீடு எடுக்கும்போது, வெறும் குடும்பத்தின் செலவுத் தொகையை மட்டும் காப்பீடாக எடுக்காதீர்கள். இத்துடன் கடன்கள், எதிர்காலத் தேவைகள் என அனைத்தும் நிரப்பும் வகையில் ஆயுள் காப்பீட்டை எடுங்கள்.
2. குடும்பத்தின் வருமானம் ஈட்டும் நபரின் மொத்த ஆண்டு சம்பளத்தின் குறைந்தபட்சம் 15 மடங்கு தொகையை ஆயுள் காப்பீடாக எடுக்க வேண்டும்.

மருத்துவக் காப்பீடு என்றால் என்ன?
எதிர்பாராத சூழலில் ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்காக மருத்துவக் காப்பீடு எடுப்பது நல்லது.
மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது கவனிக்கப்பட வேண்டியவை என்ன?
1. மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது, அது என்னென்ன நோய்களுக்குக் கவரேஜ் வழங்குகிறது என்பதை நன்கு கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
2. வெயிட்டிங் பீரியட் எவ்வளவு, மருத்துவத் தேவைகளுக்காக அட்மிட் ஆகும்போது ரூம் செலவு எவ்வளவு வரும், காப்பீட்டு நிறுவனத்தோடு என்னென்ன மருத்துவமனைகள் இணைந்திருக்கின்றன போன்றவற்றை முன்பே கேட்டுக்கொள்ளுங்கள்.
பொதுவாக கவனிக்க வேண்டியவை என்ன?
காப்பீடு எடுக்கும் நிறுவனத்தைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு, அந்தக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீட்டை எடுத்துக்கொள்ளுங்கள்.
எந்தக் காப்பீடு எடுத்திருந்தாலும் அது கட்டாயம் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்திவிடுங்கள். இல்லையென்றால், இந்தக் காப்பீடு உங்கள் குடும்பத்திற்கு பயன்படாமேலேயே போய்விடலாம்.
காப்பீடுகளுக்கு நாமினிகளை நியமிக்கும்போது, நன்கு விவரமறிந்தவர்களை நியமியுங்கள். இது காப்பீடு உங்கள் குடும்பத்திற்கு எளிதாகவும், விரைவாகவும் சென்று சேர உதவும்.
காப்பீட்டு ஆவணங்களை வீட்டில் அனைவருக்கும் தெரிந்த இடத்தில் வைக்கவும். அப்போது தான், தேவைப்படும்போது அவர்கள் சிக்கலில்லாமல் அதை எடுத்து பயன்படுத்த வேண்டும்.