குடியாத்தம்: தந்தை முகத்தில் மிளகாய் பொடி அடித்து குழந்தை கடத்தல் - பதற வைத்த சிசிடிவி காட்சிகள்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பவளக்காரத் தெருவைச் சேர்ந்தவர் வேணு (வயது 33). பெங்களூரில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினீயராக வேலைப் பார்த்து வரும் வேணு, கடந்த 5 ஆண்டுகளாக வீட்டிலிருந்தபடியே (வொர்க் ஃப்ரம் ஹோம்) பணி செய்கிறார். வேணுவின் மனைவி ஜனனி. இவர்களுக்கு மூன்றரை வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. நெல்லூர்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள கான்வென்ட் பள்ளியில் யோகேஷ் பிரிகேஜி படித்து வருகிறான். வழக்கம்போல, இன்று காலை பள்ளிக்கு கொண்டுசென்று விட்டுவிட்டு, மதியம் 12.30 மணியளவில் மீண்டும் பள்ளியில் இருந்து மகனை மொபட் ஸ்கூட்டரில் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார் வேணு.

வீட்டுக்கு வந்தவுடன் கேட்டை திறந்து, ஸ்கூட்டரை உள்ளே தள்ளி நிறுத்தினார். குழந்தையைக் கூட்டிக்கொண்டு வேணு வருவதற்கு சில நிமிடங்கள் முன்பே வீட்டுக்கு அருகில் KA 03 NA 0143 என்ற கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சுசுகி சியாஸ் கார் ஒன்று வந்து நின்றிருந்தது. காரில் இருந்து தலையில் ஹெல்மட் அணிந்து, கையில் கிளவுஸ் போட்டபடி இறங்கிய வாட்ட சாட்டமான மர்ம நபர் ஒருவன், வேணுவின் வீட்டை நோட்டம் பார்த்தான்.
இன்னொருவன் காரை ஸ்டார்ட் செய்து வீட்டில் இருந்து சில அடி தூரம் கொண்டு சென்று தயாராக நிறுத்தினான். வீட்டை நோட்டம் பார்த்துக்கொண்டிருந்த ஹெல்மட் அணிந்திருந்த மர்ம நபர், திடீரென வேணுவின் வீட்டுக்குள் நுழைந்து அவர் முகத்தில் மிளகாய் பொடி வீசினான்.
இதையடுத்து, வேணுவின் குழந்தையை தூக்கிக்கொண்டு காரில் ஏறினான். கார் வேகமாக புறப்பட்டபோது, கண்களை தேய்த்துக்கொண்டு வேகமாக ஓடிவந்த வேணு காரை எட்டிப்பிடித்து மகனை மீட்க முயன்றார். காரின் பின்பக்க கதவை எட்டிப்பிடித்த வேணுவால் மகனை மீட்க முடியவில்லை. காரின் வேகத்தால் அவர் சிறிது தூரம் தரதரவென இழுத்துசெல்லப்பட்டார். பிறகு சாலையில் விழுந்த வேணுவுக்கு கைகளில் பலத்த சிராய்ப்பு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, குடியாத்தம் நகரக் காவல் நிலையத்துக்கு சென்று புகாரளித்தார். போலீஸார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, அந்தக் காரின் பதிவெண் போலியானது என்றும் தெரியவந்திருக்கிறது. இதைத்தொடர்ந்து, கடத்தல் கும்பலை விரைந்து பிடிக்க மாநில எல்லை சோதனை சாவடிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருக்கும் எஸ்.பி மயில்வாகனன், குழந்தையை பத்திரமாக மீட்பதற்காக தனிப்படைகள் அமைத்தும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டிருக்கிறார். கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பதைபதைக்க வைத்திருக்கின்றன.