பிக் பாஸுக்கு செல்லும் மற்றொரு ஹார்ட் பீட் தொடர் பிரபலம்!
பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளராக ஹார்ட் பீட் இணையத் தொடரில் நடிக்கும் நடிகர் ஒருவர் செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் புதிய சீசன் வரும் அக். 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில், புதிய 9வது சீசனையும் விஜய்சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
ஆண்டுதோறும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் வெளி உலகத் தொடர்பின்றி 100 நாள்கள் இருக்க வேண்டும், இடையிடையே நடக்கும் போட்டிகளிலும் வெற்றிப் பெற வேண்டும் என்பதே விதி.
இந்த நிலையில், பிக் பாஸ் - 9 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை நக்ஷத்ரா, நடனக் கலைஞரும் சமையல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளருமான ஜன்மோனி டோலி, பாக்கியலட்சுமி தொடர் பிரபலம் நேஹா, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சின்ன திரை நடிகர் புவியரசு, நடிகர் உமர், நடிகை பாடினி குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஹார்ட் பீட் வெப் தொடரில் நடிக்கும் பாடினி குமார், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இதே தொடரில் நடிக்கும் நடிகர் ரோஷனும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லவுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.
ரோஷன் மாடல் மற்றும் நடிகராவார். இவர் கனா காணும் காலங்கள் தொடரில் நடித்து, மக்கள் மத்தியில் பிரபலமானவர். தற்போது ஹார்ட் பீட் இணையத் தொடரில் சிறுவயது விஜய் பாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் படிக்க: ஜன நாயகன் முதல் பாடல் எப்போது?