புதினைத் தடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும்: உக்ரைன் அதிபர்
லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களில் 4 பேர் உயிரிழந்தனர்.
கடந்த 2019-இல், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் நடவடிக்கையால், லடாக் பகுதியுடன் ஒன்றிணைந்து ஜம்மு - காஷ்மீர் என்ற பெயரில் மாநில அந்தஸ்துடன் விளங்கிய பகுதியை, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு தனித்தனி யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து, மத்திய அரசின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் அப்பகுதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. லடாக் தனியாகப் பிரிக்கப்பட்டதற்கு அப்பகுதி மக்களிடையே ஆரம்பத்தில் வரவேற்பு இருந்தாலும், அதன்பின்னர் அப்பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி பொதுவெளியில் கோரிக்கை வலுத்துள்ளது.
இந்த நிலையில், சமூக செயல்பாட்டாளரக அறியப்படும் சோனம் வாங்க்சுக் இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த செப். 10-ஆம் தேதிமுதல் ஒரு குழுவாக இணைந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர்களுள் இருவருக்கு உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் லடாக்கில் சோனம் வாங்க்சக்கின் ஆதரவாளர்களான பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, லடாக்குக்கு மாநில அந்தச்து கோரியும் அரசமைப்புச் சட்டத்தின் 6-ஆவது பட்டியலின்கீழ் லடாக்கை இணைக்கவும் கோரி ‘லே அபெக்ஸ் பாடி(எல்.ஏ.பி.)’ என்றழைக்கப்படும் லே பகுதியைச் சார்ந்த இளையோர் அணியினரின் அரசியல் பிரிவு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் வன்முறை மூண்டது.
மத்திய அரசைக் கண்டித்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தின்போது, ஏற்பட்ட வன்முறையில் லே பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீஸார் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி அவர்களை கலந்து போகச் செய்தனர்.
இதையடுத்து, லே - லடாக்கில் ஊரடங்கு உத்தரவு அமல்பட்டு 5 பேருக்கும் மேற்பட்ட நபர்கள் ஓரிடத்தில் கூடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தான் கடந்த 15 நாள்களாக கடைப்பிடித்து வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக சோனம் வாங்க்சுக் இன்று அறிவித்துள்ளார். தமது ஆதரவாளர்கள் எவ்வித வன்முறையிலும் ஈடுபடக் கூடாது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்விவகாரம் குறித்து, லே அபெக்ஸ் பாடி(எல்.ஏ.பி.) மற்றும் கார்கில் டெமாக்ரடிக் அலையன்ஸ்(கே.டி.ஏ.) உறுப்பினர்களுடன் மத்திய அரசு தரப்பிலிருந்து அக். 6-இல் பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.