900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
`தலைமுடி உதிர்வு' - தீக்குளித்து உயிரை மாய்த்த கல்லூரி மாணவி; குமரியில் அதிர்ச்சி - என்ன நடந்தது?
உயிரை மாய்த்த கல்லூரி மாணவி அஸ்வினி
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வன். இவரது மனைவி ரூபி ஆன்றணி பாய். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
ஞானசெல்வன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ரூபி ஆண்டனி பாய் தனது இரண்டு மகள்களுடன் காரங்காடு பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வந்தார்.
ரூபி ஆண்டனி பாய் தனது மூத்த மகள் அஸ்வினியை(19) வீட்டில் விட்டுவிட்டு இளைய மகளுடன் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுள்ளார்.
அவர் சர்ச்சுக்குச் சென்ற சிறிது நேரத்தில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் ரூபி ஆண்டனி பாயின் வீட்டுக்குச் சென்று பார்த்தனர்.

சர்ச்சுக்குச் சென்றிருந்த ரூபி ஆண்டனி பாய்க்கு அங்கிருந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். பதறியடித்து வீட்டுக்குச் சென்ற ரூபி ஆண்டனி பாய், உடல் கருகிய நிலையில் சடலமாகக் கிடந்த மகளைக் கண்டு கதறி அழுதார்.
அங்கு அஸ்வினியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்ட அவர்கள் தீயை அணைக்க முயன்றுள்ளனர்.
வீட்டு கதவுகள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றனர். அதற்குள் அஸ்வினி உடல் முழுவதும் கருகி இறந்தார்.
முடி உதிர்வுப் பிரச்னை
இதுகுறித்த தகவலின்பேரில் இரணியல் போலீஸார் அங்கு சென்று அஸ்வினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீஸார் நடத்திய விசாரணையில், அஸ்வினி நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் விலங்கியல் முதலாம் ஆண்டு பயின்று வருவதாகவும், தலைமுடி உதிர்வுப் பிரச்னை காரணமாக அஸ்வினி அவதிப்பட்டு வந்ததாகவும், நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் முடி உதிர்வுப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படுத்த சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது.

முடி உதிர்வு பிரச்சினைக்குத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்ததை அடுத்து அவருக்குத் தீராத தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் தலைவலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருக்கிறார். அதன் பிறகு மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அஸ்வினி தங்கள் வீட்டில் உள்ள பைக்கிற்கு ஊற்றுவதற்காக பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றித் தீ வைத்துத் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அஸ்வினியின் தாயார் ரூபி ஆண்டனி பாய் கொடுத்த புகாரின் அடிப்படையில் இரணியல் போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.