கவின் கொலை விவகாரம்: சிபிசிஐடி போலீஸார் தெரிவித்த அதிர்ச்சித் தகவல்!
கவின் கொலை விவகாரத்தில், காதலைக் கைவிடுமாறு கவின் மிரட்டப்பட்டார் என்று விசாரணையின்போது சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாற்றுச் சமூகத்து பெண்ணை காதலித்தற்காக கவின் செல்வகணேஷ் நெல்லையில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் நான்காவதாக சேர்க்கப்பட்டுள்ள சுர்ஜித்தின் சகோதரர் ஜெயபால் என்பவர் காதலை கைவிடுமாறு கொலைக்கு முன்னேரே கவினை மிரட்டியதாக சிபிசிஐடி போலீஸார் நீதிமன்றத்தில் அளித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுர்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளர் சரவணன், உறவினர் தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சிபிசிஐடி போலீஸாார் விசாரித்துவரும் இவ்வழக்கில், 3 பேரும் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுர்ஜித்தின் தாயார் கிருஷ்ணகுமாரி தலைமறைவாக உள்ளார்.
ஏற்கனவே சரவணன் கோரிய ஜாமீன் மனுவை நெல்லை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதைத்தொடர்ந்து ஜெயபால் கோரிய ஜாமீன் மனுவும் நெல்லை 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிசிஐடி போலீஸார், கொலைக்குப் பிறகு ஜெயபால் ஆதாரங்களை மறைக்க உதவியதோடு, கொலை நிகழ்வதற்கு முன்பே ஜெயபால், உயிரிழந்த கவின் செல்வகணேஷை சந்தித்து மிரட்டினார் என அதிர்ச்சி தகவலையும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்
குறிப்பாக, கயத்தாறுக்கு வரவழைத்து, காதலைக் கைவிடுமாறு அவர் எச்சரித்ததாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தது.
இதன் மூலம், ஜெயபால் கொலைக்குப் பின் உதவியவர் மட்டுமல்ல, கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளிலேயே ஒரு முக்கியப் புள்ளியாக ஜெயபால் இருந்திருக்கிறார் என்பது சிபிசிஐடி தரப்பின் வாதமாக உள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஹேமா ஜெயபால் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: பாங்காக் சாலையில் ஏற்பட்ட மகா பள்ளம்! புகைப்படங்கள்