லடாக்குக்கு மாநில அந்தஸ்து கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறை: 4 பேர் பலி!
உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க வைத்த கணவன்
உத்தரப்பிரதேசத்தில் வரதட்சணை கொண்டு வராத பெண்ணை தனி அறையில் அடைத்து பாம்பை விட்டுக் கடிக்க வைத்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது. கான்பூரைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண் ஷாநவாஸ் என்பவரைச் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் நடந்த சிறிது நாட்களில் ரேஷ்மாவிடம் அவரது வீட்டிலிருந்து வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு கணவன் வீட்டார் சித்ரவதை செய்ய ஆரம்பித்தனர். வீட்டில் கூடுதலாக ஒரு அறை கட்டவேண்டும் என்று கூறி ரூ.1.50 லட்சம் வாங்கி வரும்படி ரேஷ்மாவிடம் கேட்டுக்கொண்டனர்.

ரேஷ்மாவின் பெற்றோர் அதனைக் கொடுத்தனர். அதன் பிறகு மேலும் ரூ.5 லட்சம் கேட்டனர். ஆனால் அந்தத் தொகையை ரேஷ்மாவின் பெற்றோர் கொடுக்கவில்லை. இதையடுத்து ரேஷ்மாவைத் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தனர்.
சம்பவத்தன்று ரேஷ்மாவை இரவில் தனி அறையில் போட்டு அடைத்தனர். அந்த அறைக்குள் ரேஷ்மாவின் கணவர் குடும்பத்தார் பாம்பை உள்ளே விட்டனர். நள்ளிரவில் பாம்பு ரேஷ்மாவைக் கடித்துவிட்டது. உடனே வலியில் ரேஷ்மா கதறித் துடித்தார். ஆனால் அவருக்கு ரேஷ்மாவின் கணவர் குடும்பத்தார் உதவாமல் ரேஷ்மாவின் அறைக்கு வெளியில் நின்று சிரித்துக்கொண்டிருந்தனர். இதனால் ரேஷ்மா தனது சகோதரிக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.
ரேஷ்மாவின் சகோதரி ரிஷ்வானா விரைந்து வந்து தனது சகோதரியை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தார். அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக ரேஷ்மா கொடுத்துள்ள புகாரின் பேரில் போலீஸார் ரேஷ்மாவின் கணவர், கணவரின் பெற்றோர், சகோதரர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.