Shwetha Mohan: ``இசைக்கு நான் நேர்மையாக இருந்திருக்கேன்!" - கலைமாமணி விருது குறி...
தினகரன் - செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை! அடுத்த திட்டம் என்ன?
அதிமுக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அமமுக பொதுச் செயலர் தினகரனைச் சந்தித்து அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அப்போதுதான் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். மேலும், கட்சியில் இருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள்கள் கெடு விதித்திருந்தார். இதனால், கட்சிக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டார்.
அவர் வகித்து வந்த அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளையும், அதே போன்று அவரது ஆதரவாளர்களான முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட 13 பேரின் கட்சிப் பதவிகளையும் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.
கட்சியில் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் செங்கோட்டையன் தில்லிக்குச் சென்று மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். இதனால், செங்கோட்டையனை நிரந்தரமாக கட்சியில் ஓரங்கட்ட எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்ததாக கூறப்பட்டது.
அதேவேளையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த டிடிவி தினகரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் முதல்வர் வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தக் கூட்டணியில் இருந்து விலகினார்.
இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரும் மீண்டும் அதிமுகவில் இணைவார்களா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரனின் வீட்டுக்கு திங்கள்கிழமை மாலை நேரில் சென்ற அண்ணாமலை, அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத்தொடர்ந்து, தற்போது செங்கோட்டையனும் புதன்கிழமை டிடிவி தினகரன் வீட்டுக்குச் சென்று ஆலோசனை நடத்தியுள்ளார்.
அடையாறில் உள்ள தினகரனின் வீட்டுக்கு இன்று(செப்.24) மதியம் வந்த செங்கோட்டையன் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்த டிடிவி தினகரன் மீண்டும் கூட்டணியில் இணைவாரா? அல்லது அதிமுகவின் கொங்கு மண்டலத்தில் முக்கிய புள்ளியான செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் மற்றும் அமமுகவினர் தனியாக கூட்டணி அமைத்து வரும் பேரவைத் தேர்தலை எதிர்கொள்வார்களா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.