கூட்டணி தர்மம் 2 பக்கமும் இருக்க வேண்டும்: திமுகவுக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வ...
சிக்ஸர் சூரியவன்ஷி..! ஆஸி.யில் உலக சாதனை படைத்த 14 வயது சிறுவன்!
இளையோருக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர் என்ற புதிய சாதனையை இந்திய இளம்வீரர் வைபவ் சூரியவன்ஷி படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் 19 வயதுக்குள்பட்டோருக்கான அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற நிலையில், 2-வது ஒருநாள் போட்டி பிரிஸ்பேனின் இவான் ஹேலே ஓவல் திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 300 ரன்கள் குவித்தது. இந்திய அணித் தரப்பில் அபிக்யான் குண்டு 71 ரன்களும், வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா இருவரும் தலா 70 ரன்கள் எடுத்தனர்.
அதிரடியாக விளையாடி வைபவ் சூரியவன்ஷி இந்தப் போட்டியில் 5 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இதன்மூலம், இளையோர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை ஒன்றையும் சூரியவன்ஷி படைத்துள்ளார்.
இதுவரை 10 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள வைபவ் சூரியவன்ஷி, 41 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணி வீரர் உன்முக் சந்த் 2012 ஆம் ஆண்டு 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையின்போது 38 சிக்ஸர்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. அதனை வெறும் 14 வயதான சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.
10 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியவன்ஷி, 540 ரன்கள் குவித்துள்ளார். அதில், 26 சதவிகித ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் மூலமாக கிடைத்துள்ளன.
யு-19 ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர் விளாசியவர்கள்
வைபவ் சூரியவன்ஷி(இந்தியா) - 41
உன்முக் சந்த்(இந்தியா) - 38
ஸவாத் அப்ரா(வங்கதேசம்) - 35
ஷதாப் கான்(பாகிஸ்தான்) - 31
தவ்ஹித் ஹிருதோய்(வங்கதேசம்) - 30
யஷஸ்வி ஜெய்ஸ்வால்(இந்தியா) -30