தாலியுடன் வந்த 11-ம் வகுப்பு மாணவி; 6 மாதங்களுக்குப் பிறகு தெரிந்த விவரம் - போலீ...
அம்பேத்கரை அறிவோம்: அரசியலமைப்பின் தந்தையாக என்ன செய்தார் அம்பேத்கர்?
அவர் மறைந்து ஆண்டுகள் அறுபது ஆகிவிட்டது. ஆனபோதிலும் நாட்டின் வளர்ச்சி குறித்த விவாதங்களில் எல்லாம், இன்றளவும் தவிர்க்க முடியாத ஒருவராய் விளங்குகிறார் டாக்டர் அம்பேத்கர்.
ஓரிரு பகுதிகளில் என்றில்லாமல், நாடு முழுவதும் பரவலாக அதிக எண்ணிக்கையில் அவருக்குத்தான் சிலை வைக்கப்பட்டுள்ளன. அவ்வளவு கொண்டாடப்படுவதற்கான காரணம், “அனைவரும் சமம்” என்ற அவரது உயரிய கோட்பாடே. இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் 28.11.2024 அன்று, கையில் அரசியலமைப்பு சாசனத்தை ஏந்தியபடி நாடாளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொள்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தி.
கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடந்த 18ஆவது நாடாளுமன்றத் தேர்தலில், அரசியலமைப்பு சாசனத்தைக் கையில் வைத்துக்கொண்டே நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை செய்ததுடன், `இண்டியா' கூட்டணியைச் சேர்ந்த ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், அரசியலமைப்பு சாசனத்தை உயர்த்திப் பிடித்தவாறே நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டனர். `அரசியலமைப்பு சாசனத்தைக் காப்போம்' என்ற முழக்கத்தை முன்வைத்து, தமிழ்நாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட, நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் சமீப காலமாக மாநாடுகளை நடத்தி வருகின்றனர்.
இயற்றப்பட்ட முக்கால் நூற்றாண்டு கடந்த பின்னரும், அரசியலமைப்பு சாசனத்தின் படியான ஆட்சி நிலவ வேண்டும் என்றும், அதற்கு முரணாகவும், அதனை நீர்த்துப் போகச்செய்யும் வகையிலுமான ஒன்றிய, மாநில அரசுகளின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்ப்போம் எனத் தொடர்ச்சியாக நாட்டின் எதிர்கட்சிகள் குரல் எழுப்ப வேண்டிய அளவுக்கு அதில் என்ன இருக்கிறது? அதனால் நாம் அடைந்தது என்ன? 1946 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அறிஞர் அம்பேத்கர் நியமிக்கப்பட்டார். ஊராட்சிமன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் தலைவராக செயல்படுவதற்கும், நாடு முழுவதும் பலர், தங்களின் சாதி காரணமாக பல்வேறு தடைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
கல்வியும், சமூக அங்கீகாரமும் பரவலாகப் பெற்றுள்ள இன்றைய காலகட்டத்திலேயே இதுதான் நிலைமை. கல்வி மறுக்கப்பட்டதுடன், சாதிய ஏற்றத்தாழ்வுகளும் மிகுந்திருந்த அன்றைய காலகட்டத்தில், நாட்டையே வழிநடத்தும் அரசியலமைப்பு சாசனத்தை உருவாக்கும் குழுவிற்குத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு, எந்த அளவிற்கு தன்னை அவர் தயார்படுத்தி இருக்கவேண்டும். அந்த வரைவுக் குழுவில் மொத்தம் ஏழு பேர் இடம் பெற்றிருந்தாலும், அம்பேத்கரே அரசியல் சாசனத்தை முழுமையாக உருவாக்கியதுடன், அதுகுறித்த பெரும்பாலான கேள்விகளுக்குப் பதிலும், விளக்கமும் அளித்தவர் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு.
நம் நாடு சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில்தான், உலகின் பல நாடுகளும் ஆங்கிலேயர் ஆதிக்கத்திலிருந்து விலகி, காலனி நாடு என்ற நிலையிலிருந்து விடுபட்டு, சுதந்திர நாடுகளாக மாறிக்கொண்டிருந்தன. அன்றைய சூழலுக்கு ஏற்ப மட்டுமின்றி, போதிய அளவிற்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில்லா காலத்தில், பின்னாளில் உருவாவதற்கு வாய்ப்பிருக்கும் புதிய பிரச்னைகளை, சிக்கல்களை முன் அனுமானித்து, அதற்கும் ஏற்ற வகையிலான கூறுகளை அரசியல் சாசனத்தில் உள்ளடக்குகிறார்.
பத்துக்கும் அதிகமான நாடுகளின் அரசியல் சாசனத்திலிருந்து, சிறப்பான சரத்துகளை தேர்ந்தெடுத்த போதிலும், அந்தக்கூறுகளை அப்படியே பயன்படுத்திக் கொள்ளாமல், மொழி, மதம், சாதி, உணவு, உடை, நிலவியல் அமைப்பு, பழக்க வழக்கம் எனப் பல்வேறு வேற்றுமைகள் நிரம்பிய நம் நாட்டின் தனித்தன்மைவாய்ந்த சூழலுக்கேற்ப, கச்சிதமாய்க் கூர்தீட்டி அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டது.
மனு சாஸ்திரத்தினை அடிப்படையாகக்கொண்டு, சாதிக்கொரு நீதி, தான் சார்ந்திருக்கும் சாதிக்கேற்ப மாறுபட்ட தண்டனை என நீண்ட நெடுங்காலமாக, ஏற்றத்தாழ்வுகளுடன் கூடிய சமூக அநீதிகள் நிலவிவந்த நம்நாட்டில், பாகுபாடின்றி குடிமக்கள் அனைவருக்குமான அடிப்படை உரிமைகளை உறுதிசெய்தார்.
சாதியைக் காரணம்காட்டி, பிறந்த நாள் முதலாய் அனுபவித்த வன்கொடுமைகளின் தாக்கத்தின் காரணமாகவே, அனைத்து வழிகளிலும் தீண்டாமை ஒழிக்கப்படுவதாக உறுதிபடுத்துகிறார். இவ்வாறு தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்க வழிவகை செய்தபின்னரும், இப்போதும் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த `வேங்கை வயல்' போன்ற வன்கொடுமைகளை நாம் நிகழ்த்தியே வருகிறோம் என்பது பெரும் வெட்கக்கேடு.
பலவாறு பாகுபடுத்தப்பட்டு, சமூக அங்கீகாரம், கல்வி, பொதுப்பணி எனப் பல்வேறு தளங்களில் பெரும்பான்மை மக்கள் பிரிவினருக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், அவைகளைத் தகர்த்தெறியும் பொருட்டு, சமூக, பொருளாதார, அரசியலில் நீதி, சிந்திக்கவும் சிந்தனைகளை வெளிப்படுத்தவுமான சுதந்திரம், வாய்ப்பு மற்றும் சமூக அந்தஸ்தில் சமத்துவம், தனி மனித மாண்புடன் கூடிய சகோதரத்துவம் எனும் தாரக மந்திரங்களை அனைவருக்கும் உத்தரவாதம் செய்கிறார்.
விரும்பிய மதத்தைத் தழுவவும், பின்பற்றவும், பரப்பவுமான உரிமையை, அடிப்படை உரிமையாக வரையறுத்த அவர்தான், எந்த அரசும், குறிப்பிட்ட ஒரு மதத்தினை அல்லது மதப்பிரிவினை பரவலாக்க, பராமரிக்க வரி செலுத்தச்சொல்லி எவரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உறுதிபடுத்தியதுடன், அதனை ‘அடிப்படை உரிமைகள்’ பகுதியிலும் இணைத்துள்ளதன் மூலமாக ஒரு தீர்க்கதரிசியாகவே இருந்துள்ளார்.
மத / மொழி சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதம் செய்துள்ளதுடன், அதனை ஆட்சியாளர்கள் தங்களின் விருப்பம் போல கையாள முடியாத அளவிற்கு அடிப்படை உரிமைகள் பகுதியில் சேர்த்து உறுதிசெய்யும் தொலைநோக்குப் பார்வை கொண்டவராக இருந்துள்ளார் அம்பேத்கர். இந்த உத்தரவாதம் இல்லாமலிருந்திருந்தால் இந்தியாவில் இக்கடந்த ஒரு பதிற்றாண்டில் மத சிறுபான்மையினர் நிலை என்னவாகியிருக்கும்?
அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை உரிமைகளுக்கு முரணான அரசு மற்றும் ஆட்சியாளர்களின் ஆணைகளை, சமூக பழக்க வழக்கங்களை, நேரடியாக உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்து, ரத்து செய்யக்கோரும் வகையிலான உரிமை கிடைக்கச்செய்தவர்.
எனும் உலகப் பொதுமறை தந்த வள்ளுவரின் வாக்கிற்கேற்ப, அவ்வப்போதைய ஆளும் அரசுகளின் எதேச்சதிகாரப் போக்குகளுக்கெதிரான பேச்சுரிமை, கருத்து வெளியிடும் உரிமை உள்ளிட்டவைகளை குடிமக்களின் அடிப்படை உரிமையாக உறுதி செய்துள்ளார்.
குலத்தொழில் என்ற பெயரில், நீண்ட நெடுங்காலமாக சாதிக்கொரு வேலை நடப்பிலிருந்த நம்நாட்டில், சட்டப்படி தடை செய்யப்படாத எந்தத் தொழிலையும் எவரும் செய்துகொள்ளும் உரிமையை, உறுதி செய்துள்ளதன் வாயிலாக, இன்று எவ்விதத் தடையுமின்றி, நாம் விரும்பிய தொழிலை செய்வதற்கான உரிமையை, அனைவரும் பெற்றுள்ளோம். இல்லையென்றால் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலையில் வாழ்ந்த, கூலி வேலைபார்த்த பெற்றோர்களுக்குப் பிறந்த என் போன்றோர், உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக தொழில்புரியும் அளவுக்கு வந்திருக்க முடியுமா என்ன?
வாழ்வுரிமையையும், தனிமனித சுதந்திரத்தையும் உறுதிசெய்ததுடன், சங்கம் அமைக்கவும், அமைப்பாய்த் திரள்வதற்கும், விரும்பிய இடத்தில் குடிபெயர்வதற்குமான உரிமையையும் அனைவருக்கும் உறுதிபடுத்தியிருக்கிறார்.
மதம், இனம், சாதி, பாலினம், வழித்தோன்றல், பிறப்பிடம், வசிக்குமிடம் என எவ்வகையிலும், எவரும் பாகுபடுத்தப்படக் கூடாது எனக் குறிப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது.
அனைவரும் சமம் என்ற தத்துவத்தை இணைத்த அவரே, நேர்மறைப் பாகுபாட்டுக்கு ஆதரவாகவும் பேசுகிறார். பெண்களும், பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், நூற்றாண்டுகளாய் ஆட்சி அதிகாரத்திலிருந்து ஒதுக்கியே வைக்கப்பட்டு வந்தனர்.
அதன் காரணத்தால், அவர்களை மேம்படுத்துவதற்கான சிறப்புச் சட்டங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், அரசுப்பணியிடங்களிலும், பதவிகளிலும் அவர்களது பங்கேற்பினை உறுதிசெய்யும் பொருட்டு, சமமான வாய்ப்பினை உருவாக்கித்தரும் வகையில் இடஒதுக்கீடு எனும் சிறப்புத் திட்டத்தை உருவாக்கித் தந்தவர் அம்பேத்கர்.
இதுவே, சுதந்திர இந்தியாவில் அனைத்து சமூகப் பெண்களும், பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், அரசின் அதிகாரமிகுந்த பெரும் பதவிகளை வகிப்பதற்கு வித்திட்டது. இதன் பலனைத் தெரிந்துகொள்வதற்கு, சுதந்திரத்திற்கு முன்னர் நிலவிய சூழலை ஒப்பிட்டுப் பார்த்தாலே போதும்.
இவ்வளவுக்குப் பிறகும், நாடு சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்கள் கடந்துவிட்ட பின்னர், 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு, நியமிக்கப்பட்டுள்ள 684 உயர்நீதிமன்ற நீதிபதிகளில், பிற்படுத்தப்பட்டோர் 82 பேர், பட்டியலினம் 21 பேர், பழங்குடியினர் 14 பேர் மட்டுமே. இதர 567 பேரும் முற்படுத்தப்பட்ட சமூகத்தினரே என்பது அதிர்ச்சி அளிக்கக்கூடியதாகவே இருக்கிறது.
காவல் காப்பது, சட்ட ஒழுங்குப் பிரச்னைகளை பார்த்துக்கொள்வது, தண்டனைகள் வழங்குவது என்று மட்டும் நின்றுவிடாமல், நாடு, ஒரு மக்கள் நல அரசாக உருவெடுக்கும் வகையிலான கூறுகளை உள்ளடக்கிய அரசியல் சாசனத்தை இயற்ற எத்தனை பரந்த வாசிப்பும், அனுபவமும், பகுப்பாய்வுச் சிந்தனையும் இருந்திருக்க வேண்டும் அம்மனிதருக்கு.
சட்டத்தைவிட இங்கு எவரும் அதிகாரம் படைத்தவரல்ல. அனைத்தையும்விட சட்டமே வலியது. ஆட்சியாளர்களின் எதேச்சதிகாரப் போக்கு இல்லாது, சட்டத்தின் ஆட்சியே நடைபெறும் என்பதை நிலைபெறச் செய்தவர். ஆளும் அரசுகள், தம் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப எவரையும் தண்டிக்கமுடியாது எனும் அரசியலமைப்பு சாசனத்தின் படியான ஆட்சியே சட்டத்தின் ஆட்சி.
வேற்றுமையில் ஒற்றுமை எனும் முழக்கத்தைப் பெருமையாகக் கருதுவதற்கான அடிப்படை சூழலை உருவாக்கித் தந்தவர் அண்ணல் அம்பேத்கர். அவ்வப்போதைய சூழல்களுக்கேற்ப நாடாளுமன்றத்தால் 106 முறை அரசியலமைப்பு சாசனம் திருத்தம் செய்யப்பட்டிருந்தாலும், அதன் அடிப்படைக் கூறுகள் எதுவும் கை வைக்கப்படாமல் அப்படியே உள்ளன.
கல்வி, சமூகம், பொருளாதாரம், சாதி, மதம், பெண்கள், குழந்தைகள், சுற்றுச்சூழல், அயலுறவு, பணம், மொழி, நீதி, ஆட்சி, அரசியல் என சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் அவரது பார்வை தெளிவாகவும், தீர்க்கமானதாகவும் இருப்பதுடன், இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும் வகையில் இருக்கிறது. பரந்துபட்ட தனது கல்வி, அதன் தொடர்ச்சியான விசாலமான பார்வையின் வாயிலாக, அந்த அளவிற்கு எதிர்காலம் குறித்து அவரால் தெளிவாகக் கணிக்க முடிந்திருக்கிறது. அனைத்துத் தரப்பினரின் சமத்துவத்திற்காகவும் சிந்தித்த அந்தத் தலைவரின் கருத்தியல் தெளிவின் காரணமாகவே, அவரை ஒரு சாதிய வட்டத்திற்குள் மட்டும் அடைக்க முயற்சிப்பவர்களால், தலைமுறை தாண்டியும் வெல்லமுடியாமல் போகிறது.
சில நாட்களுக்கு முன்னர், நவம்பர் 26 ஆம் நாளில் 75 ஆவது “சட்ட தினம்” நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்பட்டது. சட்டம் எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்தும் ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு ஏற்பவே அதன் பயன்பாடு இருக்கும். சமத்துவ சமூகம் படைக்க வேண்டும் என்ற பெருங்கனவுடன், அனைவருக்கும், அனைத்து உரிமைகளையும் உறுதிசெய்ததுடன், ஒரு நாகரீக சமூகமாய் வளர்ச்சியடைந்து, நீடித்த, நிலையான, வளமான எதிர்காலத்தை நாடும், நாமும் அடைய விரும்பியவர்.
அப்பெருங்கனவு நனவாவது, அம்மாமனிதர் பெரும்பாடுபட்டு உருவாக்கித் தந்துள்ள அரசியல் சாசனம் காக்கப்படுவதிலும், அதன் நோக்கங்களை ஆளும் அரசுகள் அமல்படுத்துவதிலும், உள்ளபடியே நடைமுறைப்படுத்தும் வகையில் நாம் தொடர்ந்து தலையீடு செய்வதிலும்தான் இருக்கிறது.