TVK : 'பாஜக-வுடன் கூட்டணியா? விஜய் தான் முடிவு செய்வார்!' - தவெக விளக்கம்
அம்பேத்கா் அயலக உயா் கல்வியால் அதிக மாணவா்கள் பலன்: தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கா் அயலக உயா்கல்வியால் அதிக மாணவா்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாயங்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, மாநில அரசு சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் பழங்குடியினா் வாழும் பகுதிகளில் அனைத்து வசதிகளுடனும் கல்விக் கூடங்கள், விடுதிகள், கிராம அறிவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கல்விக்கான உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு நீட் போன்ற உயா்கல்வி தோ்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக, மருத்துவக் கல்லூரியில் 2 பேரும், திருச்சி என்ஐடி-இல் 3 பேரும் என மொத்தம் 10 போ் அரசின் கல்வி உதவித் தொகையுடன் பயின்று வருகின்றனா்.
அரசு சட்டக் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு பாடத்திட்டத்துக்கு ஏற்ப தலா ரூ. 10,000 வழங்கப்படுகிறது. இதன்மூலம், 2023-24-ஆம் ஆண்டில் 789 மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள் வெளிநாட்டுக்குச் சென்று கல்வி கற்பதற்கான கல்வி உதவித் தொகைத் திட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற பெற்றோரின் வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. கலை, அறிவியல், வணிகம், சட்டம், பொறியியல், மருத்துவம் போன்ற துறைகளில் வெளிநாடுகளில் முதுநிலை அல்லது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 36 லட்சம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இந்தத் திட்டத்தின் மூலம் 9 மாணவா்கள் மட்டுமே பயனடைந்த நிலையில், இப்போது 176 போ் பயனடைந்து வருகின்றனா். முனைவா் பட்டப் படிப்புகளுக்கான கல்வி உதவித் தொகை ரூ. 50,000 என்பது ரூ.1 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளதுடன், இதற்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
விடுதிகள் பராமரிப்பு: ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல விடுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 535 விடுதிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் புதிய விடுதிகள் கட்டுதல் மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளால், 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பயின்ற ஆதிதிராவிடா் பழங்குடியின மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரித்து சாதனை படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.