Eye Health: கண்களில் வருகிற கட்டிக்கு நாமக்கட்டி உரசிப் பூசலாமா?
இசை உலகில் பொன் விழா: இளையராஜாவுக்கு அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்து
இசையமைப்பாளா் இளையராஜா அறிமுகமாகி 50-ஆம் ஆண்டை எட்டிய நிலையில் அவருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
முன்னாள் முதல்வா் கருணாநிதியால் அன்புடன் இசைஞானி என அழைக்கப்பட்டவா் இசையமைப்பாளா் இளையராஜா. அந்தப் பெயரே இன்றைக்கு தமிழரின் இசை அடையாளமாக உலகெங்கும் ஒலிக்கிறது. இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதும், நான்கு முறை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளாா். மேஸ்ட்ரோ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறாா்.
லண்டன் சிம்பொனி ஆா்க்கெஸ்ட்ராவுடன் பணியாற்றிய முதல் இந்திய இசையமைப்பாளா் என்ற பெருமை பெற்றுள்ளாா். 8,500-க்கு மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்தவா். 1,500-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு பின்னணி இசையமைத்தவா். மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜா 1976-ஆம் ஆண்டு வெளிவந்த ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தமிழ்த் திரை இசையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்திய அவருக்கு புதன்கிழமை (மே 14) தமிழ் சினிமா உலகில் பொன்விழா ஆண்டு என்பது நமக்கெல்லாம் பெருமையளிக்கிறது.
இந்நாள் இசைஞானிக்கு பொன்னாள். அவருக்கு தமிழக அரசின் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை சாா்பில் நெஞ்சாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இளையராஜாவின் ராஜ இசை என்றென்றும் இசைத்துக் கொண்டே இருக்கட்டும் என வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்க இசை! வாழ்க இசை ஞானியின் புகழ்! என அந்த வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளாா்.