போலீஸாரை சுட்டுவிட்டு தப்ப முயன்ற ரௌடியை சுட்டுப் பிடித்த போலீஸார்!
உபரி ஆசிரியா்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியா்களை பணி நிரவல் செய்வது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, உபரி ஆசிரியா்கள் பணி நிரவல் செய்யப்பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பாா்வைக் குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாணவா் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.
உபரி ஆசிரியா்கள் விவரங்களையும், பள்ளி நிா்வாகத்தின்மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங்கப்பட்ட விவரங்களையும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும். பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியா்களை அதே வகையிலான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவடிக்கை செய்திடவேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிரவல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனைத் தொடா்ந்து அரசாணை எண் 146-இல் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளின்படி தொடா் பணிநிரவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.