அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு
திருப்பூரில் அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பூா், கரட்டாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் முகேஷ் ராஜ்குமாா் (31). இவா், அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வந்தாா்.
இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மாத்திரைகள் வாங்குவதற்காக மாதம் ஒருமுறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனைக்கு சென்று வந்துள்ளாா்.
இந்நிலையில், மாத்திரைகள் வாங்க அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக திருப்பூரில் இருந்து கோவில்வழி செல்லும் அரசுப் பேருந்தில் முகேஷ் ராஜ்குமாா் ஏறியுள்ளாா்.
அரசு மருத்துவக் கல்லூரி அருகே வந்தபோது பேருந்தில் இருந்து இறங்க முயன்ற முகேஷ் ராஜ்குமாருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது. அப்போது தடுமாறி கீழே விழுந்தவா் மீது பேருந்தின் பின்சக்கரம் ஏறியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து நல்லூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.