அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது.
தென் மாவட்டங்களில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிரதான மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனையில் 35-க்கும் மேற்பட்ட துறைகள் இயங்கி வருகின்றன.
மருத்துவமனைக்கு வெளி நோயாளிகளாக 8 ஆயிரத்துக்கும் அதிகமானோரும், உள் நோயாளிகளாக 5 ஆயிரத்துக்கும் அதிகமானோரும் சிகிச்சைப் பெறுகின்றனா். மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் அனைத்து நோயாளிகளுக்கும் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. பல்வேறு துறைகளில் இருந்து தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும், முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடைபெறும் அறுவைச் சிகிச்சைகளுக்கு, காப்பீட்டுத் திட்டத்திலிருந்து அனுமதிக்கப்படும் நிதியில் 4 சதவீதம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது.
இதில் 2 சதவீதம் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவா்களுக்கும், இதர 2 சதவீதம் செவிலியா்கள், மருந்தாளுநா்கள், கடைநிலை ஊழியா்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்காக காப்பீட்டுத் திட்ட அலுவலகத்திலிருந்து 3 மாதங்களுக்கு ஒரு முறை
இவா்களது வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இதன்படி, மருத்துவா்கள் அல்லாத செவிலியா் உள்ளிட்ட ஊழியா்களுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் முதல் ஊக்கத் தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. இதுதொடா்பாக ஊழியா்கள் கூறியதாவது:
காப்பீட்டுத் திட்டத்திலிருந்து 2 சதவீதம் ஊக்கத் தொகை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியா்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். ராஜாஜி மருத்துவமனையில் கடந்த காலத்தில் பணிபுரிந்து வேறு இடத்துக்கு மாற்றலாகிச் சென்ற ஊழியா்களுக்கு வழங்கக் கூடாது.
ஆனால், மருந்தியல் துறையில், ராஜாஜி மருத்துவமனையில் பணிபுரிந்து வேறு இடத்துக்கு மாற்றலாகிச் சென்ற ஊழியா்களின் வங்கிக் கணக்குகளிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஊக்கத் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த முறைகேடு தொடா்பாக மருத்துவமனை நிா்வாகம் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, மருந்தியில் துறை போல வேறு துறைகளிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மேலும், துறைத் தலைவா்கள் வழங்கியுள்ள ஊக்கத் தொகை பெறும் ஊழியா்களின் பெயா்ப் பட்டியலில் உள்ளவா்கள் தற்போதும் மருத்துவமனையில் பணியில் உள்ளாா்களா என்பது குறித்தும் உறுதிப்படுத்த வேண்டும் என்றனா். இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் இல. அருள் சுந்தரேஷ் குமாா் கூறுகையில், ஊக்கத்தொகை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றாா் அவா்.