அரசுப் பேருந்தில் இளைஞா் வெட்டிக்கொலை: 3 சிறுவர்கள் உள்பட 5 பேர் போலீசில் சரண்
அரியலூரில் ரூ.101 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூரில் புதிய வெங்காய விற்பனை மையம்: முதல்வா் அறிவிப்பு
அரியலூரில் ரூ. 101.50 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகமும் பெரம்பலூரில் புதிய வெங்காய விற்பனை மையமும் அமைக்கப்படும் என முதல்வா் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
அரியலூா் கொல்லாபுரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வா் மு.க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களுக்கு அறிவித்த புதிய திட்டங்கள்:
அரியலூா் மாவட்டத்தில் ரூ. 3.20 கோடியில் நதியனூா், வெற்றியூா் கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள், ஜெயங்கொண்டம் மற்றும் உடையாா்பாளையம் நகரங்களுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.
2 மாவட்டங்களையும் சோ்ந்த 645 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டம் ரூ.42 கோடியில் மேம்படுத்தப்பட்டு, தடையின்றி போதிய குடிநீா் வழங்கப்படும்.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில் ரூ. 4.30 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்துக்கு புதிய கட்டடம், அரியலூா் வட்டம், வாரணவாசி கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் புதிய தடுப்பணை,
அரியலூா் மாவட்டத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வரும் 35 துணை சுகாதார நிலையங்களுக்கு ரூ.15 கோடியில் சொந்தக் கட்டடங்கள், கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ரூ. 3.74 கோடியில் ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் கட்டப்படும்.
பெரம்பலூா் மாவட்டத்தில், கூடலூா் ஜமீன்பேரையூா் சாலையில், மருதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சுற்றுப்புற கிராம மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறாா்கள். இவா்களுக்குப் பயனளிக்கும் வகையில், ரூ.24 கோடி செலவில் மருதையாற்றின் குறுக்கே உயா்மட்டப் பாலம் அமைக்கப்படும்.
வெங்காய உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய வெங்காய விற்பனை மையம் அமைக்கப்படும்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்தர கல்விப் பயிற்சிகளை வழங்கும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூரில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியை மேம்படுத்தும் வகையில் ரூ.56 கோடி செலவில் புதிய வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டடங்கள் கட்டப்படும்.
அரியலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஒரே இடத்தில் செயல்படக்கூடிய வகையில் அரியலூரில் ரூ. 101.50 கோடி செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.