`ஆக்கிரமிப்பை அகற்ற விடாமல் தடுக்கிறாரா திமுக எம்.பி கல்யாணசுந்தரம்’ - கும்பகோணம் சலசலப்பு
கும்பகோணத்தில் பொதுமக்கள் பலரது முதலீட்டில் செயல்பட்டு வருகிறது கும்பகோணம் பரஸ்பர ஸ்காய நிதி நிறுவனம். பாரம்பர்யமான இந்த நிதி நிறுவனத்தின் தலைவராக ஆளும் கட்சியை சேர்ந்த ஒருவர் இருப்பது வழக்கம். தற்போது நிதி நிறுவனத்தின் தலைவராக தி.மு.க எம்.பியும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் பதவி வகித்து வருகிறார். நிதி நிறுவனத்தின் பக்கவாட்டிலும், முகப்பிலும் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து வரக்கூடிய உள்ளூர் வாய்க்கால் என்கிற பாசன வாய்க்கால் செல்கிறது.
கல்யாணசுந்தரம் எம்.பி, வாய்க்காலின் மேல் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து காகிரீட் தளம் அமைத்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் இன்று விடியற்காலை ஐந்து மணியளவில் கான்கிரீட் தளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துள்ளனர். இதையறிந்த கல்யாணசுந்தரத்தின் மகனும் தி.மு.கவின் கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றுவதை தடுத்துள்ளனர். மேலும் ஜேசிபி டிரைவர் உள்ளிட்டவர்களை தகாத வார்த்தைகளில் திட்டி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசினோம், கும்பகோணத்தில் குளங்கள், அவற்றுக்கு நீர் செல்லக்கூடிய வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிக்கப்புகளை அகற்ற வேண்டும் என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது தொடர்பாக நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு சில உத்தரவுகள் பிறபித்திருந்தன. அதன்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வந்தன.
கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனத்தையொட்டி செல்லக்கூடிய உள்ளூர் வாய்க்காலின் மேல் பகுதியில் ரூ.90 லட்சம் செலவில் கான்கிரீட் தளம் அமைத்திருந்தனர். அதன் தலைவராக இருக்க கூடிய தி.மு.க எம்பி கல்யாணசுந்தரத்தின் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்துவதற்காக வாய்க்கால் இடத்தை ஆக்கிரமித்து தளம், மேற்கூரை அமைத்திருந்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு கல்யாணசுந்தரம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் ஆளும் கட்சி பவரை பயன்படுத்தி கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து ஆக்கிரமிப்பை அகற்றாமல் தடுத்தார்.
இதைதொடர்ந்து, யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, ஆக்கிரமிப்புகளை அகற்ற தயக்கும் காட்டும் ஆணையர் லட்சுமணன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நான்கு ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவையுடன் ஆக்கிரமிப்பை அகற்ற ஆணையர் உள்ளிட்டோர் சென்றனர். நிதி நிறுவனத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த செட்டை பிரித்தனர். கான்கிரீட் தளத்தை உடைக்க முயன்ற போது, கல்யாணசுந்தரம், ஆணையரிடம் கடுமையாக பேசி தடுத்து விட்டார்.
இந்நிலையில் இன்று விடியற்காலை யாருக்கும் தகவல் கொடுக்காமல் ஐந்து மணி அளவில் ஒரு ஜேசிபி மற்றும் 25 மாநகராட்சி ஊழியர்கள் வந்து ஆக்கிரமப்பை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர். இதையறிந்த முத்துசெல்வம் தன் ஆதரவாளர்களுடன் வந்து தடுத்தார். அப்போது முத்துசெல்வம் ஜேசிபி டிரைவர் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளில் திட்டினார். இதையடுத்து ஆக்கிரமிப்பை பாதியில் கைவிட்டு கிளம்பி சென்றனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிமன்றம் உத்தரவிட்ட ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு திமுக எம்பி தொடர்ந்து எதிராக செயல்படுகிறார் என்றனர். இது குறித்து பேசுவதற்கு ஆணையர் லட்சுமணனை தொடர்பு கொண்டோம், அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை.
இது குறித்து கல்யாணசுந்தரம் எம்.பியிடம் பேசினோம், அவர், ``பொதுமக்கள் வசதியை கருத்தில் கொண்டு கான்கிரீட் தளம் அமைப்பது உள்ளிட்ட பணிக்கு நிதி நிறுவனம் சார்பாக கும்பகோணம் மாநகராட்சிக்கு ரூ. 90 லட்சம் வழங்கினோம். அந்த நிதியில் மாநகராட்சி நிர்வாகம் கான்கிரீட் தளம் அமைத்து கொடுத்தது. அத்துடன் வாய்க்காலுக்கு எந்த சிக்கலும் வரக்கூடாது என்பதை கவனத்தில் கொண்டு 10 அடி அகலம், எட்டு அடி உயரத்தில் தளம் அமைக்கப்பட்டுள்ளது. வாய்க்காலுக்கு தண்ணீர் வரக்கூடிய ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள மற்ற இடங்களை இன்னும் அகற்ற வில்லை. பா.ஜ.க போராட்டம் நடத்துவதாக சொல்கிறார்கள் என கூறி அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நிதி நிறுவனத்தின் தளத்தை அகற்றுகின்றனர்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs