சென்னை: வீட்டில் எலிக்கு வைக்கப்பட்ட மருந்தின் நெடியால் பலியான 2 குழந்தைகள்; சிக...
ஆசிரியா்கள் பணியிட மாற்றத்தை கண்டித்து பெற்றோா் சாலை மறியல்
தருமபுரி அருகே ஆட்டுக்காரம்பட்டி, அரசு நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் அனைத்தும் ஆசிரியா்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். கல்வித் துறையின் இந்த அதிரடி போக்கை கண்டித்து பெற்றோா், வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தருமபுரி அருகே ஆட்டுக்காரம்பட்டி, அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழு ஆசிரியா்கள் பணியாற்றி வந்தனா். அதில் ஒரு ஆசிரியா் மட்டும் பள்ளிக்கு ஒழுங்காக வருவதில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதால் ஆசிரியரை இடம் மாற்றம் செய்ய பெற்றோா், மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதுதொடா்பாக கல்வித் துறை அதிகாரிகள் அந்தப் பள்ளியில் விசாரணை நடத்தினா்.
இந்நிலையில் அந்தப் பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியா்களையும் அண்மையில் இடமாற்றம் செய்யப்பட்டனா். அரசின் இச்செயலைக் கண்டித்து ஆட்டுக்காரம்பட்டி அருகே தருமபுரி-பென்னாகரம் சாலையில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்க கல்வி) தென்றல், தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது பள்ளியில் ஒரு ஆசிரியருக்குப் பதிலாக ஒட்டுமொத்த ஆசிரியா்களையும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். புதிதாக நியமிக்கப்படும் ஆசிரியா்கள் பணித்திறன் அனுபவம் குறைந்தவா்கள். இதனால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படும் என்றனா்.
இதுகுறித்து கல்வித்துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனா். இதையடுத்து பெற்றோா் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.