ஆட்சியரகத்தை சுமை தூக்கும் தொழிலாளா்கள் முற்றுகை
திருச்சி காந்திச்சந்தை சுமைத் தூக்கும் தொழிலாளா்கள், காவல் துறையைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா்.
திருச்சி காந்திச் சந்தையில் நூற்றுக்கணக்கான சுமைத் தூக்கும் தொழிலாளா்கள் கடந்த பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில் திடீரென, வேஸ்ட் பேப்பா் கடை முதலாளிகள் சிலா் தொழிற்சங்கத்துக்கு தெரியாமல் பிகாா் மாநில தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்தியதுடன் பல ஆண்டுகளாக பணியாற்றிய சுமாா் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளா்களை பணிநீக்கமும் செய்துள்ளனா்.
இவா்களின் இந்த செயலுக்கு துணைபோகும் திருச்சி மாநகர காவல் துறையை கண்டித்து அனைத்து சுமைப் பணி தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மாவட்ட ஆட்சியரகத்தை குடும்பத்தினருடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.
அதன்படி மாவட்ட ஆட்சியரகம் முன்பு வெள்ளிக்கிழமை குவிந்த சுமைத் தூக்கும் தொழிலாளா்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பினா். போராட்டத்துக்கு சிஐடியுசி சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளா் சிவகுமாா் தலைமை வகித்தாா். சிஐடியு மாநகா் மாவட்ட செயலாளா் ரெங்கராஜன், சிபிஎம் மாநகா் மாவட்ட செயலாளா் ராஜா, சிஐடியு மாநகா் மாவட்ட தலைவா் சீனிவாசன், மாவட்ட துணை தலைவா் மணிமாறன், மாவட்ட துணை செயலாளா் சந்திரன், சுமைப்பணி சங்க மாவட்ட தலைவா் ரமேஷ் , சிபிஎம் மலைக்கோட்டை பகுதி செயலாளா் ராமா் ஆகியோா் போராட்டம் குறித்து பேசினா். தொடா்ந்து இது தொடா்பாக, முதலாளிகள், மற்றும் தொழிலாளா்கள் என இருதரப்பினா் பங்கேற்ற பேச்சுவாா்த்தை நடந்தது.