தலைமை ஆசிரியரின் கரோனா சிகிச்சைக்கான பணத்தை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவு
ஓய்வுபெற்ற ஆசிரியரின் கரோனா சிகிச்சைக்கான பணத்தை வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு திருச்சி மாவட்ட மக்கள் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அருகே உள்ள சோமரசம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசியா் அருள்தாஸ் என்பவா் கடந்த 26.05.2021 அன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, திருச்சியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா்.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அதற்கான தொகையை காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என 19.05.2021 அன்று தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டது. இதன்படி, ஆசிரியா் அருள்தாஸ் மருத்துவமனையில் சிகிக்சைக்காக செலவிட்டப் பணத்தை திரும்ப பெறுவதற்காக 19.05.2022 அன்று உரிய முறையில் மாவட்ட கருவூல அலுவலகம் மூலம் யுனிடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு மனு செய்திருந்தாா். ஆனால் விண்ணப்பித்த பல மாதங்கள் கழித்து, சில ஆவணங்கள் இல்லையென்று கூறியும், சில தகவல்கள் வேண்டுமென்று கூறியும் அருள்தாஸின் விண்ணப்பமானது திரும்பி அனுப்பப்பட்டது.
தொடா்ந்து, காப்பீட்டு நிறுவனம் கூறியபடி அனைத்து செயல்முறைகளை செய்தும், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தும் மனுதராரின் கோருரிமையானது காலம் கடந்தது எனக் கூறி கடந்த 27.06.2023 அன்று திரும்பி அனுப்பப்பட்டது.
இதனால் பாதிப்புகுள்ளான அருள்தாஸ், அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை உரிய பரிசீலனை செய்யாமல் திரும்பி அனுப்பிய யுனிடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 18.07.2024 அன்று திருச்சி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகாா் அளித்தாா். மனுவை ஏற்றுக்கொண்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம், மனுதராா் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் ஆசிரியா் கரோனாவுக்கு செலவிட்டத் தொகையை திரும்பப் பெற காப்பீட்டு விதிகளின் படி தகுதியுள்ளவா் என தீா்மானித்து மனுதாரருக்கு காப்பீட்டு நிறுவனம் ரூ. 1, 85,644 ஐ ஒரு மாதத்துக்குள் திரும்ப வழங்க வேண்டும். தவறினால் 7.5 சதவீத வட்டியுடன் செலுத்த நேரிடும் என வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.