மக்கள்தொகை கணக்கெடுப்புக்கே பாஜக ஏன் பயப்படுகிறது? - திக்விஜய் சிங்
சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.
தில்லியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் கூறுகையில்,
'மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலையை பாஜக செய்கிறது. ஆனால், பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதாக ராகுல் காந்தி கூறுகிறார். விரிவான ஆய்வுகளின் அடிப்படையில்தான் எதற்கும் தீர்வு கிடைக்கும்.
மக்கள்தொகை மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பிரிவினர் வேலை வாய்ப்புகள் பெறலாம் என அரசியல் சட்டத்தில் விதி உள்ளது.
கார்ப்பரேட் நிறுவன தலைவர்களில் எத்தனை பேர் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினராக இருக்கிறார்கள்? ஊடகத்தில் பழங்குடியினரைச் சேர்ந்த எத்தனை பேர் இருக்கிறார்கள்?
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக தேவை. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே பாஜகவினர் ஏன் பயப்படுகிறார்கள்? 2021 கணக்கெடுப்பு காலாவதியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டன' என்று பேசியுள்ளார்.