Cheteshwar Pujara: புஜாரா எனும் மாடர்ன் டிராவிட்; இந்தியாவின் வெற்றிடத்தை நிரப்பப்போவது யார்?
ஆஸ்திரேலியாவில் இன்னும் ஒரு வாரத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் தொடங்கவிருக்கிறது. இந்த முறை ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடராக இது நடைபெறவிருக்கிறது. இந்தத் தொடர், டெஸ்ட் உலக சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதப்போகின்றன என்பதைத் தீர்மானிக்கும் தொடராகவும் இருக்கும். இந்தியாவுக்குமே, இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான முக்கியமான தொடர் இது. இவையனைத்துக்கும் மேலாக, ஒரு புதிய இளம் டெஸ்ட் படையைத் தயார் செய்வதற்கான சூழலை இந்த டெஸ்ட் தொடர் உருவாக்கியிருக்கிறது.
இதற்கெல்லாம் காரணம், நியூசிலாந்துடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வரலாற்றுத் தோல்வியே. டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலிருந்த இந்திய அணி இந்தத் தோல்வியால், இரண்டாம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவை முதலிடத்துக்கு உயர்த்தி தாமாகக் கீழிறங்கிக் கொண்டது. அதோடு, சுலபமாக இறுதிப் போட்டிக்குச் செல்லலாம் என்றிருந்த நிலையை, பார்டர் கவாஸ்கர் தொடரில் ஐந்தில் நான்கில் வென்றால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற கடினமான சூழலையும் உருவாக்கிக்கொண்டது.
சொந்த மண்ணில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை சீனியர் வீரர்களாக முன்னின்று அணியை வெற்றிபெற வைக்கக்கூடிய பொறுப்புடைய கேப்டன் ரோஹித்தும், கோலியும் சொதப்பியதே தோல்விக்கு முக்கிய காரணம். ரோஹித், கோலி, கே.எல். ராகுல் போன்ற சீனியர் வீரர்களை வைத்துக்கொண்டு தோல்வியடைவதற்கு, இளம் வீரர்களை வைத்துக்கொண்டு ஒன்றிரண்டு தொடர்களில் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை புதிய அணியைக் கட்டமைக்கலாம் என்று கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டது.
அப்படிப் பார்த்தாலுமே, ஒரு முனையில் எத்தனை விக்கெட்டுகள் சரிந்தாலும் நான் நிற்பேன் என ஆடும் புஜாராவைப் போன்ற வீரர் இப்போதைய டெஸ்ட் அணியில் யார் இருக்கிறார், அந்த வீரரை உருவாக்கும் முயற்சியில் அணி நிர்வாகம் ஈடுபட்டிருக்கிறது என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. ஏனெனில், டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் வெற்றி என்பது ஒருநாள் போட்டி அல்லது டி20 போட்டி போல ரன்களை இலக்காகத் துரத்துவதல்ல. 20 விக்கெட்டுகளை யார் வீழ்த்துகிறார்கள் என்பதில்தான் அந்த வெற்றியே இருக்கிறது. அதற்குக் கோலி போன்ற வீரரைப் போல புஜாரா போன்ற தடுப்புச் சுவரும் மிக முக்கியம்.
டிராவிட், லக்ஷ்மணனுக்குப் பிறகு எதிரணியைத் திணறவைத்த சாலிட் தடுப்பாட்ட பேட்ஸ்மேன் என்றால் அது புஜாராதான். இந்திய டெஸ்ட் அணிக்கென்றே உருவெடுத்தது போல, ஐந்து நாள்களும் பேட்டிங் செய்யத் தயார் எனக் கால்களில் பேட் கட்டிக்கொண்டு ரெடியாக இருப்பார். இதுவரை, இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கும் 8 பேட்ஸ்மேன்களில் புஜாராவும் ஒருவர்.
மேலும், டெஸ்ட்டில் ஒரு இன்னிங்ஸில் 500-க்கும் மேற்பட்ட பந்துகளை எதிர்கொண்ட ஒரே இந்திய வீரர் புஜாரா மட்டும்தான். 2017-ல் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா வந்தபோது, ராஞ்சியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், 525 பந்துகளில் 202 ரன்களை அடித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் திணறடித்திருப்பார். இந்தச் சாதனை இன்னும் எந்த இந்திய வீரரும் முறியடிக்கவில்லை.
அதேபோல, 2021-ல் ஆஸ்திரேலிய மண்ணில் கப்பா (Gabba) மைதானத்தில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வெற்றியைச் சிதைக்க வீசப்பட்ட அந்நாட்டு வீரர்களின் பந்துகளை புஜாரா தன்னுடைய உடலையே சுவராக்கி நின்றதை யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 328 என்ற கடினமான இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில் ஒருபுறம் ரன்ரேட் ஏறி இறங்கி விக்கெட்டுகள் சரிய, மறுபுறம் உடலில் பந்து பதம் பார்க்காத இடமே இல்லை என்ற அளவுக்கு 211 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் அடித்து தூண் மாதிரி நின்றிருப்பார்.
ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்ஸுக்கு சராசரியாக 135 பந்துகளை எதிர்கொள்ளும் ஒரே இந்திய பேட்ஸ்மேன் புஜாரா மட்டும்தான். தற்போதைய ஆக்டிவ் இந்திய பேட்மேன்ஸ்களில், பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2,033 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். மொத்தமாக பார்டர் கவாஸ்கர் தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். 7-வது இடத்தில் கோலி இருக்கிறார்.
புஜாரா தன்னுடைய டெஸ்ட் கெரியரில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராகத்தான் அதிக ரன்களைக் குவித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கெதிராக மொத்தம் 25 டெஸ்ட்டுகளில் 2,074 ரன்களைக் குவித்திருக்கிறார். கடைசியாக, 2023-ல் லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடிய புஜாரா, இதுவரை 103 டெஸ்ட் போட்டிகளில் 176 இன்னிங்ஸில் 7,195 ரன்கள் அடித்திருக்கிறார். எந்த அணியாக ஒரு கை பார்த்துக்கொள்ளலாம் என்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் ஆஸ்திரேலிய அணி, இந்த முறை புஜாரா இல்லாததை நினைத்து பெருமூச்சு விடும் என்றால் அது மிகையல்ல.
டெஸ்டில் டிராவிட்டின் ஓய்வுக்குப் பிறகு யார் அந்த இடத்தை நிரப்புவார்கள் என்ற கேள்விக்கு எப்படி புஜாரா விடையாகக் கிடைத்தாரோ, அதேபோல புஜாராவின் இடத்தை நிரப்ப ஒரு வீரர் வராமல் இருக்கப் போவதில்லை. ஆனால், இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் அந்த வேலையை யார் செய்யப்போகிறார்கள் என்பதே இந்திய அணியின் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால்.
ஜெய்ஸ்வால், கில், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜோரல், ரிஷப் பண்ட் ஆகிய இளம் வீரர்களில் அந்த வேலையைச் செய்யப்போவது யார், ஆஸ்திரேலிய பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கப் போவது யார் என்பதையும், ரோஹித், கோலி, கே.எல்.ராகுல், ஜடேஜா, அஷ்வின் ஆகியோரின் டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலம் என்னவென்பதையும் இந்தத் தொடர் தீர்மானிக்கும். முடிவுகளைப் பொறுத்திருந்து பார்க்கலாம். தோல்வியிலிருந்து மீள இந்திய அணிக்கு வாழ்த்துகள்!
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...