ஆண்டுக்கு ஒருமுறை 24 மணி நேரம் மூடப்படும் உயர் நீதிமன்றக் கதவுகள்... நடைமுறையின் பின்னணி இதுதான்!
உலகின் மிகப்பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்றான சென்னை உயர் நீதிமன்றம், சுமார் 170 ஆண்டுகள் பாரம்பர்யமிக்கது .
பிராட்வே, பாரிஸ் கார்னர், ரிசர்வ் வங்கி, மெட்ரோ ரயில் நிலையம், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை நீதிமன்ற வளாகத்தை சுற்றி அமைந்துள்ளதால், எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உயர் நீதிமன்ற வளாகம் உள்ளது. மொத்தம் ஏழு வாயில்களை கொண்ட இவ்வளாகத்தில் வேலை நாள்களில் எப்போதும் அதிகளவு மக்கள் நடமாட்டம் இருந்துகொண்டே இருக்கும்.
உயர் நீதிமன்றத்தைச் சுற்றி அமைந்துள்ள இந்த நுழைவு வாயில்களை பொதுமக்கள் பொது வழிப்பாதையாக பயன்படுத்தி வருவதால் பிற்காலத்தில் யாரும் உரிமை கோரக் கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில், வருடத்தில் ஒருநாள் அதாவது 24 மணி நேரம் அனைத்து வாயில்களையும் அடைத்து பொதுமக்கள், நீதிமன்ற ஊழியர்கள் என யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு அடைத்து வைக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகம் உள்ள இடம் முற்காலத்தில் கோயிலுக்கு சொந்தமானது என்றும், அதன் உரிமையை காட்டத்தான் இதுபோல நடைமுறை உள்ளது போன்ற சில ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகள் இருந்தாலும், தனது சொத்து மீதான "உரிமை"யை நீதிமன்றம் தீர்க்கமாக நிலை நாட்டிக்கொள்ளவே இது அமலில் உள்ளதாக மூத்த வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
அதன்படி ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் ஏதாவது ஒரு வார இறுதி நாள்களில் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு, பூட்டப்படுகின்றன. நீதிமன்ற நுழைவாயில்களில் இதற்கான அறிவிப்புகள் ஒட்டப்படும். சாவிகள் உயர் நீதிமன்றத்தின் ஓவர்சீஸியர் வசம் ஒப்படைக்கப்படும். இந்தச் சம்பிரதாய நடைமுறைப்படி சனி இரவு 8 மணி முதல் அடுத்தநாள் ஞாயிறு இரவு 8 மணி வரை கதவுகள் பூட்டப்பட்டு இருக்கும்.
இதனடிப்படையில், இந்தாண்டு சனிக்கிழமை (23 .11 .24 ) மாலை 8 மணி முதல் ஞாயிறு மாலை (24 .11.24 ) மாலை 8 மணிவரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாள்களில் நீதிபதிகள், வக்கீல்கள், வெளியாட்கள், போலீஸார் என யாரும் உள்ளே செல்ல முடியாது.
இது குறித்து நீதித்துறை வல்லுநர்கள் கருத்து கூறுகையில், ``சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தை ஒரு பாதையாகவே காலம்காலமாக பலர் பயன்படுத்துகின்றனர். இத்தகைய பயன்பாடு ஒரு சமயத்தில் உரிமைக்கான குரலாக சட்டத்தின் முன் எழுப்பப் படலாம் என்பதாலும்,
பல ஆண்டுகளாக எந்தவொரு தடையும் இல்லாமல், ஒரு சொத்தை பாதையாகப் பயன்படுத்த அனுமதித்து விட்டால், சொத்துக்கு உரிமையாளரிடம் பின்னாளில் சட்டப்படி இப்படியொரு உரிமை கோரப்படலாம் என்பதாலேயே இது போன்ற நடைமுறைகள் உள்ளது" என்கிறார்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நீதியரசர் வள்ளிநாயகம், ``நீதிமன்றம் வருடத்திற்கு ஒரு முறை தனது, ஆளுமையை, உரிமையைக் காத்துகொண்டு வரும் வேளையில், யாரும் உள்ளே போக உரிமை உள்ளது என்று கேட்க முடியாது என்பதை உணர்த்துவதற்கும் இதை நடைமுறைப்படுத்துகின்றனர்" எனக் கூறியுள்ளார்.