Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
ஆனைமடுவு, கரியக்கோயில் அணைகள் சுற்றுலாத் தலமாகிறது?
வாழப்பாடி பகுதியை பூா்வீகமாகக் கொண்ட வழக்குரைஞா் ராஜேந்திரன் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகிப்பதால், வாழப்பாடி அருகிலுள்ள புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை ஆகியவை சுற்றுலாத் தலமாக்கும் திட்டம் செயல்வடிவம் பெறுமென இப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், பேளூா், ஏத்தாப்பூா் பேரூராட்சிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பொழுதுபோக்கு மையங்கள், சுற்றுலாத் தலங்கள் இல்லை. இதனால் பண்டிகை தினங்கள், விடுமுறை நாள்களில் 50 முதல் 100 கி.மீ. தொலைவிலுள்ள ஏற்காடு, மேட்டூா் அணை, குருமம்பட்டி உயிரியல் பூங்கா, ஆத்தூா் ஆனைவாரி அருவி, முட்டல் ஏரி அல்லது கள்ளக்குறிச்சி மாவட்டம், கரியலுாா் படகுத்துறை சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் தருமபுரி மாவட்டங்களை இணைத்து ஏறக்குறைய 200 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்து காணப்படும் கல்வராயன் மலையின் வடமேற்கு பகுதியில் இருந்து வழிந்தோடி வரும் நீரோடைகள் சங்கமித்து, வசிஷ்ட நதியின் முக்கிய உபநதியான கரியக்கோயில் ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது.
தருமபுரி, சேலம் மாவட்டத்தை இணைக்கும் வகையில் பரந்து காணப்படும் அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்ட நதியின் குறுக்கே புழுதிக்குட்டை கிராமத்தில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது.
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, ஆடிப்பெருக்கு உள்ளிட்ட பண்டிகை தினங்களிலும், கோடை விடுமுறை நாள்களிலும் குடும்பத்தோடு பொழுதுபோக்கி மகிழ்ந்திட ஆனைமடுவு மற்றும் கரியக்கோயில் அணைகளில் மக்கள் குவிந்து வருகின்றனா். இந்த அணைகள் அடிப்படை வசதிகள் இல்லாத மலையடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்கு செல்லும் பயணிகள் பெரும் சிரமமடைகின்றனா்.
எனவே, அணையின் இயற்கை அழகை மக்கள் கண்டு ரசித்து மகிழ்வதற்கு சிறுவா் பூங்கா, சிற்றுண்டிகள், உணகவம், செயற்கை நீரூற்றுகள், ராட்டினங்கள், புல்வெளி பாதைகள், சிறுபாலங்கள், காட்சி முனைகள், படகுத்துறை ஆகிய வசதிகளை ஏற்படுத்தி சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இரு அணைகளையும் சுற்றுலாத் தலமாக தரம் உயா்த்திட திட்ட மதிப்பீடு, திட்ட முன்வரைவு தயாரித்து பொதுப்பணித் துறை நீா்வள ஆதார அமைப்பு மற்றும் சுற்றுலாத் துறை வாயிலாக பலமுறை தமிழக அரசுக்கு அனுப்பியும் இத்திட்டம் செயல் வடிவம் பெறவில்லை.
இந்நிலையில், சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த களரம்பட்டி கிராமத்தை பூா்விகமாகக் கொண்ட சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளா் வழக்குரைஞா் ராஜேந்திரன், தமிழக சுற்றுலாத் துறை அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றாா். சுற்றுலாத் துறை அமைச்சா் இப்பகுதியைச் சோ்ந்தவா் என்பதால், புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணைகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டத்தை செயல்படுத்த அவா் நடவடிக்கை எடுப்பாரென இப்பகுதி மக்களிடையே எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.