ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டது உண்மைதான்! - ஜெய்ஷ்-இ-முகமது
இந்திய விமானப்படையின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் இறந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஜம்மு- காஷ்மீரில் ஏப். 22ல் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் கடந்த மே 7 அன்று நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவா் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் இறந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மசூத் அஸாரின் அக்கா, அக்கா கணவா், அக்காவின் மகன், அவரின் மனைவி, இவர்களின் ஒரு குழந்தை, மேலும் 5 குழந்தைகள், கூட்டாளிகள் 4 பேரையும் இத்தாக்குதலில் இழந்துவிட்டதாக அவரே அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் உயிரிழந்தது உண்மைதான் என்று தாக்குதல் நடந்த 4 மாதங்களுக்குப் பிறகு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி மசூத் இல்யாஸ் காஷ்மீரி ஒரு விடியோவில், 'மே 7 அன்று பஹவல்பூரில் ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுப்ஹான் அல்லா மீதான தாக்குதலில் அஸாரின் குடும்பம் துண்டு துண்டாக கிழிக்கப்பட்டது என்று பேசியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் பலியானவர்கள் குறித்து பாகிஸ்தான் தரப்பு இன்னும் எதுவும் கூறாத நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு இவ்வாறு கூறியுள்ளது.
மசூத் அஸார் யார்?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் சா்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள அஸாா், இந்திய நாடாளுமன்றத் தாக்குதல், மும்பை பயங்கரவாதத் தாக்குதல் உள்பட இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு தாக்குதல்களில் தொடா்புடையவா்.
கடந்த 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று மிரட்டியதால் சிறையில் இருந்த மசூத் அஸாரை இந்தியா விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவா் பொது இடங்களுக்கு வராமல் பதுங்கியே வாழ்ந்து வருகிறாா்.