இந்தியா மீதான வரி புரிந்துகொள்ளக்கூடியதே; ஆனால் ரஷியா மீது...! - ஸெலென்ஸ்கி கருத்து
இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு புரிந்துகொள்ளக்கூடியது என்றும் ரஷியாவிற்கு எதிராக அமெரிக்கா கடுமையான வரி விதிக்க வேண்டும் என்றும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் ஸெலென்ஸ்கி பேசுகையில்,
"இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு புரிந்துகொள்ளக்கூடியதுதான். ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக மற்றவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை அமெரிக்கா காத்திருக்கக் கூடாது. அவ்வாறு தாமதப்படுத்தினால் ரஷியா தயாராக அதிக நேரத்தைக் கொடுப்பதாக அமையும்.
கடந்த மாதம் ரஷியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்ற அலாஸ்கா உச்சி மாநாட்டில் உக்ரைன் விலக்கிவைக்கப்பட்டதன் மூலமாக புதின் அதிகப்படியான நன்மைகளைப் பெற்றுள்ளார். புதினுக்கு இது போன்ற பல மாநாடுகளுக்கு இந்த அலாஸ்கா மாநாடு வழிவகுத்துள்ளது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க புதின் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறார். அமெரிக்காவின் பலத்தை ரஷியா புரிந்துகொண்டுள்ளது. எனவே, ரஷியாவுக்கு எதிராக மிகவும் வலுவான கடுமையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.
அமெரிக்கா தன்னளவில் மிகவும் வலிமையானது. அவர்களால் இதை விரைவாகச் செய்ய முடியும். அமெரிக்கா வலுவான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். ஏனெனில் இப்போது அது வலுவாக இல்லை.
ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தடை செய்யும் நோக்கில் இந்தியா, சீனா மீது 100% வரி விதிக்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினார். இதன் மூலமாக ரஷியா பேச்சுவார்த்தைக்கு வரும் என்று நம்பினார். ஐரோப்பிய ஒன்றியம் தங்களுடன் சேர்ந்து முன்வந்தால் இதைச் செய்கிறோம் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்" என்றார்.
Ukraine President Zelenskyy says tariffs on India 'understandable' but US must not wait to act against Russia
இதையும் படிக்க | வங்க தேசத்தில் குவிக்கப்படும் அமெரிக்க ராணுவம்! காரணம் என்ன?