டொனால்ட் டிரம்ப்புடன் பாக். பிரதமர், ராணுவ தலைமைத் தளபதி விரைவில் சந்திப்பு!
பாகிஸ்தான் பிரதமரும் ராணுவ தளபதியும் இம்மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். இம்மாதம் 25-ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளதாக இருநாட்டுத் தலைமைக்கும் நெருக்கமான நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது இந்தச் சந்திப்பு நடைபெறலாம் என்றும் சொல்லப்படுகிறது. அப்போது, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷரீஃப்புடன் அந்நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி ஆசிம் முனிர் உடனிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தகவலை வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஆமோதிக்கவோ நிராகரிக்கவோ செய்யாமல் மௌனம் காத்து வருகிறது.
கத்தாரும் சவூதி அரேபியாவும் இந்தச் சந்திப்புக்கு தேவையான முன்னெடுப்புகளை எடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. டிரம்ப்புடனான பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக ‘இந்தியா - பாகிஸ்தான் உறவு’ மோசமான நிலைக்குச் சென்றிருக்கும் விவகாரம் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.