கேரளா: ``அது என் வேலை அல்ல" - அமைச்சர் சுரேஷ் கோபி! - வைரல் வீடியோவின் பின்னணி?
மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி பொது நிகழ்ச்சியில் ஒரு முதியவரின் கோரிக்கையை நிராகரித்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக பதவிவகிப்பவர் நடிகர் சுரேஷ் கோபி.
கேரளாவில் பா.ஜ.க-வின் முதல் நாடாளுமன்றத் தொகுதி திருச்சூர். மக்களவைத் தேர்தலில் நடிகர் கோபி வெற்றி பெற்றதற்கான காரணங்களில் முக்கியமானது, அவர் பல ஆண்டுகளாகச் சமூகப் பணிகளின் மூலம் மக்களின் அன்பைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் பலரும் அவரிடம் பலக் கோரிக்கைகளை முன்வைப்பதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கேரள மாநிலம் திருச்சூரில், உள்ளூர் வளர்ச்சிப் பிரச்னைகளை அடையாளம் காண தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அதன் அடிப்படையில் செப்டம்பர் 12 அன்று, கொச்சு வேலாயுதன் என்ற 80 வயது முதியவர், மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபியிடம், ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓடு வேயப்பட்ட என் வீட்டின் மீது மரம் விழுந்ததால் அது சேதமடைந்துவிட்டது.
சேதமடைந்த வீட்டின் அருகே அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக குடிசையில் தான் வசித்து வருகிறேன். எனக்கு என் வீட்டை பழுதி நீக்கித் தரவேண்டும்" என்றார்.
இந்தக் கோரிக்கையை அமைச்சர் சுரேஷ் கோபி நிராகரித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதியவர் கொச்சு வேலாயுதம், ``கோபி மனுவை ஏற்கவே இல்லை. வீடு கட்டிக் கொடுப்பது பஞ்சாயத்தின் வேலை.
அது அவரது வேலை இல்லை எனக் கூறிவிட்டார். அவர் அமைச்சர் என்பதால்தான் அவரிடம் கோரிக்கை வைத்தேன். நான் அவரை கட்டாயப்படுத்தவில்லை.
அவர் கட்டிக்கொடுக்கவில்லை என்றாலும், குறைந்தபட்சம் என் ஆவணத்தையாவது ஏற்றிருக்கலாம்" என்றார். இந்த செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த சம்பவத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் அமைச்சர் சுரேஷ் கோபி தன் முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார்.
அதில், ``வீடு கட்டுவதற்கு உதவி கோரிய விண்ணப்பத்தை நிராகரிப்பது தொடர்பாக பல செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. சிலர் அதை தங்கள் தனிப்பட்ட அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதைக் கண்டேன்.
ஒரு பொது ஊழியராக, நான் என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பது குறித்து எனக்கு தெளிவான புரிதல் உள்ளது. வீட்டுவசதி என்பது மாநில அதிகாரத்துக்குள் வருகிறது.
எனவே, இதுபோன்ற விஷயங்களில் நான் முடிவு செய்ய முடியாது. மாநில அரசுதான் அதைக் கவனிக்க வேண்டும். என் எல்லைக்குள் செயல்பட்டு மக்களுக்கு உண்மையான சேவைகளை வழங்குவதே எனது முயற்சிகளாகும்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை நான் வழங்குவதில்லை. மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது எனது பாணி அல்ல" என்றார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், சிபிஐ(எம்) தலைவர்கள் வேலாயுதனை சந்தித்தனர்.

மேலும், அவரது வீட்டைக் கட்டிக்கொடுப்பதாக வாக்குறுதியளித்திருக்கின்றனர்.
திருச்சூர் மாவட்ட சிபிஐ(எம்) செயலாளர் கே.வி. அப்துல் காதர், தன் முகநூல் பக்கத்தில், ``மனுக்களை ஏற்றுக்கொள்வது அவரது வேலை அல்ல எனத் தெரிவித்திருக்கிறார் மத்திய அமைச்சரும் திருச்சூர் எம்பி-யுமான சுரேஷ் கோபி.
அவரால் அவமதிக்கப்பட்ட கொச்சு வேலாயுதனின் வீட்டை நம் கட்சி கட்டும். வீட்டின் பணிகள் நாளை தொடங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.