எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்து - பரவும் வீடியோ!
புதிய கார் வாங்குவது இந்தியர்களுக்கு எப்போதுமே ஒரு மிகப் பெரிய சாதனைதான். அப்படித்தான் அதீத சந்தோஷத்துடன் தனது மகிந்திரா தார் காரை வாங்கியிருக்கிறார் 29 வயதான மானி பவார்.
சாலைக்கு கொண்டுசெல்லப்படும் முன்னரே புதிய காருக்கு வழக்கமாக நடத்தப்படும் சடங்குகளை ஷோரூமிலேயே செய்திருக்கிறார் மானி. அதன்பகுதியாக ஒரு எலுமிச்சைப் பழத்தை காரின் டயருக்கு அடியில் வைத்து ஏற்ற அவர் செய்த முயற்சி காரையே காலிசெய்யும் செயலாக முடிந்திருக்கிறது.

எலுமிச்சை பழத்தை அடியில் வைத்துவிட்டு, ஆக்ஸிலேட்டரை ஓரே மிதியாக மிதித்ததில் பீஸ்ட் பட காட்சி போல ஷோரூமின் முதல் தளத்திலிருந்து பறந்து வந்து விழுந்திருக்கிறது அவரது கார், தார்.
நடந்தது என்ன?
கடந்த திங்கள்கிழமை (செப்டம்பர் 8) டெல்லியின் நிர்மன் விகார் பகுதியில் உள்ள மகிந்திரா ஷோரூமில் 27 லட்சம் மதிப்புள்ள தார் காரை டெலிவெரி எடுக்கச் சென்றுள்ளார் மானி பவார். காருக்கு பூஜை செய்து அதன் சக்கரத்துக்கு அடியில் எலுமிச்சையை வைத்துள்ளார்.
லேசாக ஆக்ஸிலேட்டரை மிதித்தால் எலுமிச்சை எளிதாக நசுங்கிவிடும். அதற்காக காரில் ஏறி அமர்ந்த மானி, தவறுதலாக அதிக அழுத்தம் கொடுத்து அழுத்தியிருக்கிறார்.
Insurance company pic.twitter.com/LHn02eXM4j
— Kapil`ॐ (@iAKsSaviour) September 10, 2025
இதனால் காருக்குள் இருந்த மானியும் விகாஸ் என்ற ஷோரூம் ஊழியரும் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பறந்துவந்து நடைபாதையில் விழுந்துள்ளனர்.
ஷோரூமுக்கு வெளியே கார் தலைகீழாக கவிழ்ந்தபடி கிடக்கும் வீடியோ இணையமெங்கும் பரவி வருகிறது. காரில் ஏர் பேக்குகள் வேலை செய்ததால் இருவருக்கும் உடலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
அருகில் இருந்த மாலிக் மருத்துவமனையில் இருவருக்கும் முதலுதவி வழங்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கார் வாங்க உடன் வந்த மானியின் கணவர் பிரதீப் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.