ஆர்.என். ரவியே ஆளுநராக தொடர வேண்டும்: மு.க. ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என். ரவியே தொடர வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன் என்று தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று, மாற்றுக் கட்சியினர் சுமார் 3,000 பேர் திமுகவில் இணையும் மிகப்பெரிய நிகழ்ச்சி நடைபெற்றது. திமுகவில் இணைந்தவர்களை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் வரவேற்று திமுக துண்டை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவில் இணைந்த 51 நிர்வாகிகளும், பெரியார் சிலையை ஸ்டாலினுக்கு நினைவுப்பரிசாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அடுத்த முறையும் தனது உரையைப் படிக்காமல் ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேற வேண்டும். ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் எல்லாம் அவர் பேசும் பேச்சுதான் திமுகவை வளர்க்கிறது. அதனால்தான் இந்த ஆளுநரே தமிழகத்தில் தொடர வேண்டும் என பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக, தமிழக சட்டப்பேரவையில், ஆளுநரை உரையை ஆளுநர் ஆர்.என். ரவி வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியுள்ளார். இதனைக் குறிப்பிட்டு முதல்வர் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருக்கிறார்.