இளம் தம்பதி சுட்டுக்கொலை! கொலையாளி தப்பியோட்டம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இளம் கணவன் மனைவியை சுட்டுக்கொன்று விட்டு கொலையாளி தப்பியோடியுள்ளார்.
ஜெய்பூரின் சங்கனெர் சதார் பகுதியிலுள்ள சாந்தி விகார் காலனியைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 26), இவர் தனது மனைவி ஆஷா மீனா (25) மற்றும் உடன் பிறந்த சகோதரர் சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜன.24) காலை ஆஷாவின் தொழிற்சாலையில் பணிப்புரியும் மோனு என்பவர் அவர்களது வீட்டிற்கு ராஜாராம் மற்றும் ஆஷாவுடன் பேச வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அவர் திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் கொண்டு இருவரையும் மிகவும் நெருக்கத்திலிருந்து சுட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். இந்த தாக்குதலில் இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.
இதையும் படிக்க: பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் பலி?
இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி மகாத்மா காந்தி அர்சு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, காவல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு, தப்பியோடிய கொலையாளி மோனுவை தேடி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, இந்த கொலைச் சம்பவம் நடந்தபோது ராஜாராமின் சகோதரி அதே வீட்டில் அவர்களுடன் தான் இருந்தார் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.