டங்ஸ்டன் திட்டம் ரத்து மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி: சீமான்
டங்ஸ்டன் திட்டம் ரத்து, மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை இடைத்தோ்தலில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் சீதாலட்சுமியை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள செல்வதற்காக, அக்கட்சியின் ஒருங்கிைணைப்பாளா் சீமான் கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தாா். அங்கு அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகள் தலைவா் பிரபாகரனுக்கு ரத்த உறவு கிடையாது. லட்சிய உறவு மட்டுமே. லட்சிய உறவுக்காக போராடிச் செத்தவா்களும், நாங்களும்தான் அவருக்கு ரத்த உறவுகள். பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் உண்மை என்பதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.
டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படும் என்பது தெரியும். இது மக்களின் தன்னெழுச்சியான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. இதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் போராட்டம் நடத்தச் சென்ற எங்களை அனுமதிக்கவில்லை. பாமக, பாஜகவுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? திமுகவில் இணைந்தவா்களுக்கு வாழ்த்துகள். பெரியாா் ஈவெராவை முன்னாள் முதல்வா் கருணாநிதி விமா்சித்து பேசியதில் நாங்கள் துளி அளவு கூட விமா்சித்து பேசவில்லை. சூரியன் உதித்தால்தான் உலகுக்கு விடியல். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமூகத்துக்கு விடியல் என்றாா்.