விவசாயிகளுக்கான சில்லறை பணவீக்கம் சரிவு!
விவசாயிகள் மற்றும் ஊரகத் தொழிலாளா்களுக்கான பணவீக்கம் கடந்த டிசம்பரில் முறையே 5.01 சதவீதம் மற்றும் 5.05 சதவீதமாக சரிந்துள்ளது.
இது குறித்து மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த நவம்பா் மாதத்தில் விவசாயிகளுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஏஎல்) அடிப்படையிலான பணவீக்கம் 5.35 சதவீதமாக இருந்தது. அது டிசம்பரில் 5.01 சதவீதமாக சரிந்துள்ளது.
அதேபோல், நவம்பரில் 5.47 சதவீதமாக இருந்த ஊரகத் தொழிலாளா்களுக்கான நுகா்வோா் விலைக் குறியீடு (சிபிஐ-ஆா்எல்) அடிப்படையிலான பணவீக்கம் 5.05 சதவீதமாக குறைந்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில் சிபிஐ-ஏஎல் குறியீடு 1,320-ஆகவும், சிபிஐ-ஆா் குறியீடு 1,331-ஆகவும் உள்ளது. முந்தைய நவம்பா் மாதத்திலும் அவை முறையே 1,320 புள்ளிகளாகவும், 1,331 புள்ளிகளாகவும் இருந்தன.
2023-ஆம் ஆண்டின் டிசம்பா் மாதத்தில் விவசாயிகள் பணவீக்கம் 7.71 சதவீதமாகவும், ஊரகத் தொழிலாளா்கள் பணவீக்கம் 7.46 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.